ஜனாசா விடயத்தில் பல தவறான பிரச்சாரங்கள் முஸ்லிம் தரப்பிலேயே மேற்கொள்ளப்பட்டது. அரசாங்கத்தின் பிரச்சனையை நாமும், எமது பிரச்சனையை அரசாங்கமும் விளங்கிக் கொண்டன. இதனால் ஜனாசா அடக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. இதுவரை 181 ஜனாசா பெட்டிகள் எரிக்கப்பட்டுள்ளன. இதற்குள் நிறைய மறைவான விடயங்கள் உள்ளன என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று (16) இடம்பெற்றது. இதில் உரையாற்றிய போதே இந்த தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாசா விடயத்தில் தவறுதலாக பல பொய் பிரச்சாரங்கள் நமது தரப்பிலும் மேற்கொள்ளப்பட்டது. 181 ஜனாசாக்கள் மாத்திரம்தான் எரிக்கப்பட்டதாக நான் பாராளுமன்றத்தில் தெரிவித்த பின்னர், யாரும் அதுபற்றி வாய்திறக்க முடியாமல் இருக்கிறார்கள். அந்த ஆதாரம் கூட எங்களிடம் மாத்திரம்தான் இருக்கிறது. அதிலும் எத்தனை ஜனாசா எரிக்கப்பட்டன என்பது எங்களுக்கு மாத்திரம் தான் தெரியும்.
497 ஜனாசாக்களில் 334 ஜனாசாக்கள் எரிக்கப்பட்டதாக எம்.பிக்கள் தவறாக கூறினார்கள்.
ஆதாரப்பூர்வமாக 181 ஜனாசாக்கள் எரிக்கப்பட்டன. அதாவது ஜனாஸா பெட்டிகள் எரிக்கப்பட்டன. அது மாத்திரம் தான் சொல்ல முடியும். 181 ஜனாசா பெட்டிகள் எரிக்கப்பட்டன. என்பதோட நிற்பாட்டிக் கொள்ளுவம். இதுதான் உண்மையான தகவல். எங்களிடம் ஆதாரபூர்வமாக இருக்கிறது. அதற்குள் நிறைய மறைவான விசயங்கள் உள்ளன.
இந்த விடயத்தில் அரசாங்கம் எங்களிற்கு நிறைய உதவி செய்தது. அவர்களின் விசயத்தை நாங்கள் விளங்கியிருந்தோம், எங்களின் விசயங்களை அவர்கள் விளங்கியிருந்தார்கள். இதில் நிறைய விடயங்கள் செய்யப்பட்டன.
திடீரென 38 ஜனாசாக்கள் எப்படி வந்தன என யாருக்காவாது தெரியுமா? குளிர்சாதன பெட்டிக்குள் 38 ஜனாசாக்கள் வைக்கப்பட்டிருந்தது யாருக்கும் தெரியாது. எங்களிற்கு மாத்திரம்தான் தெரியும் எங்கெங்கு எத்தனை இருந்தன என்பது. அதற்குத்தான் நாங்கள் வேலை செய்தோம். அதிலும் எத்தனையோ இடையூறுகள் இருந்தன என்றார்.