இமாச்சலப் பிரதேச பாஜக எம்.பி. ராம் ஸ்வரூப் சர்மாவை டெல்லியில் உள்ள அவரின் இல்லத்தில் தூக்கில் தொங்கியடி சடலமாக போலீஸார் இன்று மீட்டனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
62 வயதாகும் ராம் ஸ்வரூப் சர்மா பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்தார். ராம் ஸ்வரூப்பின் உதவியாளர் நீண்ட நேரமாகத் தொலைபேசியில் அழைத்தும் அவர் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, அவரின் இல்லத்துக்குச் சென்றபோது வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டு இருந்தது.
இதையடுத்து, ராம் ஸ்வரூப் உதவியாளர் டெல்லி போலீஸாருக்குத் தகவல் அளித்தார். போலீஸார் வந்து வீட்டின் பூட்டை உடைத்துப் பார்த்தபோது எம்.பி. ஸ்வரூப் சர்மா தூக்கில் தொங்கியபடி கிடந்தார். இதையடுத்து, ஸ்வரூப் சர்மாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் எனத் தெரிவித்தார்.
ஸ்வரூப் சர்மா தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், அவரின் சட்டைப்பையிலோ அல்லது அவரின் அறையிலோ தற்கொலைக் கடிதம் ஏதும் சிக்கவில்லை. டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் மண்டி மாவட்டத்தில், ஜால்பேஹர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்வரூப் சர்மா. மண்டி தொகுதியில் 2014ஆம் ஆண்டிலும், 2019ஆம் ஆண்டிலும் எம்.பி.யாக ஸ்வரூப் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், “இன்று காலை 7.45 மணிக்குக் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தது. இதில் எம்.பி. ஸ்வரூப் இல்லம் பூட்டியிருக்கிறது, அழைத்தாலும் திறக்கவில்லை என்பதால், போலீஸார் உதவி தேவை என அவரின் உதவியாளர் அழைத்தார். அதன்பின் போலீஸார் ஸ்வரூப் இல்லத்துக்குச் சென்று அவரின் வீட்டுப் பூட்டை உடைத்துப் பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கியிருந்ததைக் கண்டனர்” எனத் தெரிவித்தார்.
எம்.பி. ஸ்வரூப் மறைவுச் செய்தி கேள்விப்பட்டதையடுத்து, பாஜக நாடாளுமன்றக் குழுக்கூட்டம் இன்று ரத்து செய்யப்பட்டது.