25.4 C
Jaffna
January 18, 2025
Pagetamil
விளையாட்டு

இந்தியாவை பந்தாடிய பட்லர்: இங்கிலாந்து இலகு வெற்றி!

அகமதாபாத்தில் நேற்று நடந்த இந்திய அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி.

முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்தது. 157 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 10 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி 2 வெற்றிகளுடன் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இங்கிலாந்து அணி சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகைப் போட்டிகளிலும் இந்திய அணிக்கு எதிராகப் பெறும் 99வது வெற்றி இதுவாகும்.

இந்திய அணிக்கு எதிராக அதிகமான வெற்றிகளைப் பெற்ற நாடுகளின் வரிசையில் மே.இ.தீவுகள் நாடுகளுடன் இங்கிலாந்தும் இணைந்தது. முதலிடத்தில் அவுஸ்திரேலியா 132 வெற்றிகளுடன் உள்ளது.

இந்தியப் பந்துவீச்சை வெளுத்துகட்டி 52 பந்துகளில் 83 ரன்களுடன்(4சிக்ஸர்,5பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லருக்குத்தான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

ஜோஸ் பட்லர் தனது டி20 வாழ்க்கையில் பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். உலகளவில் டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பர் பதிவு செய்த 3வது அதிகபட்ச ஸ்கோராகும்.

இந்திய அணியின் கப்டன் கோலியின் இன்னிங்ஸ் அற்புதமாக இருந்தது. கடைசி 5 ஓவர்களில் இங்கிலாந்து வீரர்களை மிரட்டி என்ன செய்வதென்று திக்குமுக்காடச் செய்யதார் என்பதை மறுக்க முடியாது. ஆனால், கோலியின் இன்னிங்ஸைவிட பட்லரின் இன்னிங்ஸ் சிறப்பாக இருந்தது என்பதையும் மறுத்துவிட முடியாது. அதற்கு இங்கிலாந்து வெற்றியே சாட்சி.

100வது டி20

இ்ங்கிலாந்து அணியின் கப்டன் மோர்கனுக்கு நேற்று 100வது டி20 போட்டி இதுவாகும். உலகளவில் 100 போட்டிகள் விளையாடிய 4வது வீரரும், இங்கிலாந்து சார்பில் முதல் வீரர் எனும் பெருமையை மோர்கன் பெற்றார். மோர்கனுக்கு அருமையான வெற்றியை 100வது போட்டியில் வீரர்கள் பரிசளித்துவிட்டனர்.

இந்திய அணியைப் பொருத்தவரை திட்டமிடல் இல்லை, பந்துவீச்சும், பேட்டிங்கும் சொதப்பல். பேட்டிங்கில் ஆக்ரோஷமாக விளையாடப் போகிறோம் என இந்தத் தொடர் தொடங்கும்முன் கப்டன் கோலி பேசியதற்கும் அணியின் செயல்பாட்டுக்கும் தொடர்பே இல்லை.

பேட்டிங்கிலும், பந்துவீ்ச்சிலும் திட்டமிடல் இல்லாமலே களமிறங்கினார்களோ என்ற கேள்விதான் எழுகிறது. ஆடுகளம் சிவந்த மண்ணைக் கொண்டது என்பதால், பந்து ஆடுகளத்தில் பட்டவுடன் நின்று அதன்பின் பேட்ஸ்மேனை நோக்கி வரும், ஸ்விங் ஆகும், சுழலும் இதைக் கவனிக்கத்து ஆடியிருக்க வேண்டும்.

ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக நன்றாக ஸ்விங்செய்யக்கூடிய தீபக் சஹரை சேர்த்திருக்கலாம், இந்திய அணியின் 156 ரன்கள் பராவாயில்லை என்றாலும், இங்கிலாந்து போன்ற மிரட்டலான அணியைக் கட்டுப்படுத்த இந்த ஸ்கோர் போதாது.

பவர்ப்ளேயில் குறிப்பிட்ட அளவு ரன்கள் சேர்க்க வேண்டும், ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் எனும் முறையான திட்டமிடல் இன்றி களமிறங்கியதும், டொட் பந்துகள் அதிகமாக சென்றதும் அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

பவர்ப்ளேயில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாகப் பந்துவீசுகிறார், ரன்களைக் கட்டுப்படுத்துகிறார். ஆனால், அவரைக் கோலி பயன்படுத்தாதது நேற்று மிகப்பெரிய தவறு. சஹலுக்கு வாய்ப்புக் கொடுத்ததை பட்லர்தான் பயன்படுத்திக்கொண்டார்

டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடி, அருமையாக செட்டில் ஆகியிருந்த ஹிட்மேன் ரோஹித் சர்மாவுக்கு 2 போட்டிகள் ஓய்வு கொடுத்து அவரை நேற்று களமிறக்கி அவரும் ஏமாற்றமளித்தார்.

ராகுல் அதிரடியான தொடக்க வீரர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவருக்கு செட்டில் ஆவதற்கு அதிகமான நேரம் தேவை எனும் பட்சத்தில் நடுவரிசையில் களமிறக்கி விளையாடவைத்து பின்னர் தொடக்க வீரராக மாற்றியிருக்கலாம்.

கடந்த முதல் ஆட்டத்தில் மார்க் உட் பந்துவீச்சில் சுருண்டதைப் போல் இந்த ஆட்டத்திலும் இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை பறிகொடுத்துவிட்டார்கள். பவர்ப்ளே ஓவருக்குள் 24 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது.

உண்மையில், மார்க் உட் டெத் ஓவர்களில் மோசமாக பந்துவீசுகிறார் என்றுதான் அவரை இங்கிலாந்து அணியிலிருந்து ஓரம்கட்டப்பட்டார். ஆனால், அவரின் பந்துவீச்சில் இந்திய வீரர்கள் தொடக்கத்திலேயே ஆட்டமிழப்பதுதான் வேதனையாக இருக்கிறது. ஆனால், கடைசியில் மார்க்உட் பந்துவீச்சை கப்டன் கோலி வெளுத்து வாங்கியதே மார்க் உட் பந்துவீச்சின் தரத்துக்கான சாட்சியாகும்.

பந்துவீச்சில் சஹல், ஷர்துல் தாக்கூர் இருவரையும் ஜோஸ் பட்லர் நேற்று கட்டம் கட்டிவிட்டார். அதிலும் ஒவ்வொரு போட்டியிலும் சஹலின் பந்துவீச்சை நோக்கி இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மோசமான தாக்குதல் நடத்துவது அவரை காலி செய்யும் முயற்சி. சஹல் பந்துவீச்சை பட்லர் துவைத்தெடுத்தபின், அவரின் பந்துவீச்சிலும் தெளிவற்ற தன்மை காணப்பட்டது, பந்தை நன்றாக டாஸ் செய்யாமல் பயந்தவாறே வீசியதையும் காண முடிந்தது.

பேர்ஸ்டோவுக்கு ஒரு கட்சை சஹல் நேற்று கோட்டை விட்டதே சஹல் மனதளவில் குழப்பத்துடன் கவனமின்மையோடு இருந்தார் என்பதற்கு சாட்சி.

இந்த ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவுக்கு ஓய்வு அளித்தது மிகப்பெரிய தவறு. கடந்த இரு போட்டிகளிலும் பெரிதாக ரன் குவிக்காத, பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்படாத ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாகவோ, அல்லது ஸ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாகவோ சூர்யகுமார் யாதவை வைத்திருக்கலாம். ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பாக ஆடிவருகிறார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, சூர்யகுமாரின் பேட்டிங்கை பரிசோதிக்க அவரை நீக்குவதில் தவறில்லை. சூர்யகுமாரை நீக்கியதுதான் ஏன் எனத் தெரியவில்லை.

அணியில் எந்தெந்த வீரர்களை வைத்து விளையாடுவது, எந்தப் பந்துவீச்சாளர்களைத் தேர்வு செய்வது என்ற குழப்பத்தோடு கோலி செயல்படுகிறார் எனத் தெரிகிறது.

இந்தியா 5 ஓவர்கள் வரை 5 விக்கெட்டுகளுக்கு 85 ரன்கள் மட்டுமே இந்திய அணி சேர்த்திருந்தது.

ஆனால், கடைசி 5 ஓவர்களில் ஜோர்டான், ஆர்ச்சர், உட் பந்துவீச்சை விராட் வெளுத்துக் கட்டினார். 37 பந்துகளில் அரைசதம் அடித்து கோலி, 46 பந்துகளில் 77 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் தனிஆளாக கோலி ஆவர்த்தனம் செய்தார். பேட்ஸ்மேனாக கோலி தனது பங்களிப்பை முழுமையாகச் செய்தார், ஆனால், கப்டனாக சில இடங்களில் கோட்டைவிட்டார்.

இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை பந்துவீச்சு, பேட்டிங்கிலும் மீண்டும் மிரட்டினர். மார்க் உட், ஆர்ச்சர், ஜோர்டன் கூட்டணி மீண்டும் சிறப்பாகச் செயல்பட்டு தொடக்கத்திலேயே நெருக்கடி ஏற்படுத்தினர். ஆனால் கடைசி 5 ஓவர்களில் கோட்டை விட்டனர்.

பேட்டிங்கில் கடந்த இரு போட்டிகளிலும் செட்டில் ஆகாமல் தவித்துவந்த பட்லர் இந்த ஆட்டத்தில் நான் ஒருவனே போதும் என்ற ரீதியில் இந்தியப் பந்துவீச்சை நொறுக்கி அள்ளிவிட்டார். உலகத்தரம் வாய்ந்த தொடக்க ஆட்டக்காரர் என்பதை ஜோஸ் பட்லர் நிரூபித்துவிட்டார், அவருக்கு ஒத்துழைப்பு அளித்த பேர்ஸ்டோவின் ஆட்டமும் பாராட்டுக்குரியது. பட்லரின் அதிரடி ஆட்டம் இங்கிலாந்து வெற்றியை எளிதாக்கியது.

157 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பட்லர், ஜேஸன் ரோய் களமிறங்கினர். ஜேஸன் ராய் 9 ரன்னில் சஹல் பந்துவீச்சில் கால்காப்பில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த மலான், பட்லருடன் சேர்ந்தார். விக்கெட் இழந்துவிட்டோமே என்பதால் பட்லர் தனது ஆட்டத்தை மாற்றமில்லை.

சஹல் வீசிய முதல் ஓவர் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசிய பட்லர், அதே ஓவரில் கடைசிப் பந்தில் மற்றொரு சிக்ஸரையும் பறக்கவிட்டார். கடந்த 2 போட்டிகளிலும் சரியாக விளையாடாத பட்லர் இந்த ஆட்டத்தில் இந்தியப் பந்துவீச்சை வெளுத்து வாங்கிவிட்டார்.

தாக்கூர் முதல் ஓவரை சுமாராக வீசினார். ஆனால் 2வது ஓவரை வீசியபோது, பட்லர் நொறுக்கி அள்ளினார், சிக்ஸர், பவுண்டரி என 16 ரன்களை குவித்தார். சஹல், தாக்கூர் பந்துவீச்சை குறிவைத்து பட்லர் வெளுத்து வாங்கிவிட்டார். பவர்ப்ளேயில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் சேர்த்தது.

இருவரின் பந்துவீச்சை துவைத்தெடுத்த பட்லரால், வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சை அடிக்க முடியவில்லை. பவர்ப்ளேயில் சிறப்பாக பந்துவீசும் சுந்தரை ஏன் பவர்ப்ளேயில் தொடர்ந்து வாய்ப்பளிக்க கோலி மறுத்தார் எனத் தெரியவி்லலை.

மலான் 18 ரன்னில் சுந்தர் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 58 ரன்கள் சேர்த்தனர்.

3வது விக்கெட்டுக்கு வந்த பேர்ஸ்டோ, பட்லருடன் சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி இங்கிலாந்து அணியை வெற்றிக்கு நகர்த்தினர். பட்லர் 26 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பட்லர் 52 பந்துகளில்83 ரன்களுடனும்(4சிக்ஸர்,5பவுண்டரி), பேர்ஸ்டோ 28பந்துகளில் 40 ரன்களுடனும்(5பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

18.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

முன்னதாக இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி முதல் ஆட்டத்தைப் போலவே தொடக்கத்திலேயே மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. மார்க் உட் பந்துவீச்சில் ராகுல் க்ளீன் போல்டாகி டக்அவுட்டில் வெளியேறினார், ரோஹித் சர்மா 15 ரன்னில் மார்க் உட் பந்துவீச்சி்ல் ஷாட்பந்தில் ஆர்ச்சரிடம் கட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 4 ரன்னில் ஜோர்டான் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பவர்ப்ளேயில் இந்திய அணி 24 ரன்ளுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரிஷப் பந்த் 25 ரன்னில் ரன் அவுட் ஆகினார்.

ஸ்ரேயாஸ் அய்யர் 9 ரன்னில் ஆட்டமிழந்தனர். 86 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. கடைசி 5 ஓவர்களில் விராட் கோலி ஆட்டத்தைக் கையில் எடுத்தார். மார்க்உட், ஆர்ச்சர், ஜோர்டன் ஆகியோரின் பந்துவீச்சில் சிக்ஸர், பவுண்டரி என கோலி விளாசினார்.

37 பந்துகளில் விராட் கோலி அரைசதம் அடித்தார். கோலி 46 பந்துகளில் 77 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழமல் இருந்தார். இதில் 4 சிக்ஸர், 8 பவுண்டரிகள் அடங்கும். ஹர்திக் பாண்டியா 17 ரன்னில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் மார்க்உட் 3 விக்கெட்டுகளையும், ஜோர்டன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

Leave a Comment