தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மும்பை இல்லத்திற்கு அருகில் இருந்து வெடிபொருட்களுடனான வாகனம் கைப்பற்றப்பட்டது குறித்து விசாரிக்கும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று வெள்ளை நிற இன்னோவா காரை கைப்பற்றியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிப்ரவரி 25 அன்று தெற்கு மும்பையில் உள்ள அம்பானியின் இல்லத்திற்கு அருகே நிறுத்தப்பட்டதற்கு முன்னர் வெடிபொருள் நிறைந்த ஸ்கார்பியோவைப் பின்தொடர்ந்த அதே இன்னோவா இதுதானா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
மும்பை காவல்துறை அதிகாரி சச்சின் வாஸ் கைது செய்யப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, டார்டியோ ஆர்டிஓவின் பதிவு எண் மற்றும் அதன் பின்புற கண்ணாடியில் போலீஸ் என எழுதப்பட்ட இன்னோவா, பெடர் சாலையில் உள்ள என்ஐஏ அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
அம்பானியின் இல்லத்திற்கு அருகே வெடிபொருள் நிறைந்த ஸ்கார்பியோவை வைத்தது தொடர்பாக 12 மணி நேரம் விசாரித்த பின்னர் நேற்று இரவு சச்சின் வாஸை என்ஐஏ கைது செய்தது.
பிப்ரவரி 25’ஆம் தேதி கார்மைக்கேல் சாலையில் உள்ள அம்பானியின் வீட்டிற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த ஸ்கார்பியோவில் சில ஜெலட்டின் குச்சிகள் மற்றும் அச்சுறுத்தல் கடிதம் இருந்தன.
இந்த ஸ்கார்பியோவின் உண்மையான உரிமையாளரான தானேவைச் சேர்ந்த தொழிலதிபர் மன்சுக் ஹிரானின் கொலை வழக்கில், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என அறியப்படும் சச்சின் வாஸுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக மார்ச் 5’ஆம் தேதி தானே மாவட்டத்தில் ஒரு சிற்றோடையில் ஹிரான் இறந்து கிடந்தார்.
ஹிரான் கொலை வழக்கை மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் படை விசாரித்து வருகிறது. ஹிரானின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட சில நாட்களுக்கு பின்னர் அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக இது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தது.
கணவரின் சந்தேகத்திற்கிடமான மரணத்தில் ஈடுபட்டதாக ஹிரானின் மனைவியால் குற்றம் சாட்டப்பட்ட சச்சின் வாஸ், சில நாட்களுக்கு முன்பு மும்பை குற்றப்பிரிவிலிருந்து வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.