தமிழ் மக்கள் கூட்டணி கட்சி விரைவில் தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு பெறும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன்.
இன்று அவர் வெளியிட்டுள்ள வாராந்த கேள்வி பதில் அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவரது வாராந்த கேள்வி பதில் அறிக்கை வருமாறு-
எமது கட்சி இன்னமும் பதிவு பெறவில்லை. பதிவு பெறக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
எமது தமிழ் மக்கள் கூட்டணியை எடுத்துக் கொண்டால் நாங்கள் எவருமே பாரிய புத்திசாலிகள், கெட்டிக்காரர்கள், திறமைசாலிகள் என்று பெயர் எடுத்தவர்கள் அல்லர். நாங்கள் மிகச் சாதாரணமானவர்கள். அரசியலுக்குப் புதியவர்கள். எங்களுக்கிருக்கும் ஒரேயொரு பொது குணாதிசயம் தான் நாங்கள் எங்கள் மக்கள் மீது அன்பு கொண்டிருக்கின்றோம் என்பது அந்த அன்பு தான் எங்கள் பலம்.
ஒரு மானிடரின் வாழ்வைப் பரிசீலித்துப் பார்த்தீர்களானால் அவரின் சிந்தனையில் இருந்து சித்தாந்தம் வரையிலான அவரின் வாழ்வுமுறையே வாழ்க்கை என்று குறிப்பிடப்படுகின்றது. சிந்தனையில் இருந்து பிறப்பது சொல். சொல்லில் இருந்து பிறப்பது செயல். ஒருவரின் சிந்தனை, சொல் மற்றும் செயல்களின் வாயிலாக அவர் பிரதிபலிப்பது தான் அவரின் சித்தாந்தம். இதிலே வழி நெடுகலும் தூய்மை வேண்டும். சிந்தனையில் தூய்மை, சொல்லில் தூய்மை, செயலில் தூய்மை. இவ்வாறு வாழ்ந்தால் எமது சித்தாந்தமும் தூய்மை பெறும். அதை விட்டு அசிங்கமான சிந்தனைகளோ, சொற்களோ அல்லது செயல்களோ எம்மை பீடித்துக் கொண்டால் எமது வாழ்க்கை கேள்விக் குறியாகி விடும்.
அரசியல் என்பது குறிக்கோள்களைக் கொண்டது. ஆகவே சித்தாந்தத்தை மையமாக வைத்தே அரசியல் நடைபெறுகின்றது, நடைபெற வேண்டும். எமது கட்சியின் சித்தாந்தம் என்ன என்று கேட்டால் மக்கள் சேவையேயாகும்.
எல்லோரும் மக்கள் சேவை செய்கின்றோம் என்று தானே கூறுகின்றார்கள் என்று கேள்வி கேட்பீர்கள். இங்குதான் தூய்மை என்பது அவசியம். மக்கள் சேவை என்று கூறி சுயநல அபிவிருத்தியே குறிக்கோளாக இருப்பவர்களின் சித்தாந்தம் தூய்மையற்றது. பின் நோக்கிச் சென்றால் அவர்கள் செயலில் தூய்மை இருக்காது, சொல்லில் தூய்மை இருக்காது, சிந்தனையில் தூய்மை இருக்காது. சுயநலமே எல்லாவற்றையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும்.
ஆகவே மிகச் சாதாரண மக்களாகிய எங்கள் கட்சி அங்கத்தவர்கள் அன்புக்கும், தூய்மைக்கும் முதலிடம் கொடுப்பவர்கள். தங்கள் மக்கள் மீது அதீத அன்பும் நம்பிக்கையும் கொண்டவர்கள். நெஞ்சிலே தூய்மையைச் சுமந்து செல்பவர்கள். இந்தத் தூய்மையின் வெளிப்பாடாகவே நாம் எமது தேர்தல் செலவுகள் பற்றிய முழுமையான கணக்கறிக்கையை மக்கள் முன்வைத்தோம். அரசியலுக்காக எம்மீது பொய்யான குற்றங்களை சுமத்துபவர்கள் மீது நாம் கோபம் கொள்வதில்லை. பரிதாபப்படுகின்றோம்.
உண்மை என்பது ஆயிரம் பொய்களுக்கு மத்தியிலும் தனித்து ஜொலிக்கக் கூடியது.
இந்த இடத்தில் இருந்து மேலும் சற்று முன்னோக்கிச் செல்ல விரும்புகின்றேன். எமது அரசியல் சித்தாந்தம் தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு என்று அறிந்திருப்பீர்கள். அதனை மையமாக வைத்து எமது கட்சி பயணிக்கின்றது. எம்மை நாமே ஆள்வது சுயநிர்ணய உரிமை பாற்பட்டது. சுயநிர்ணய உரிமையை எங்கள் அரசியலில் முதனிலைப்படுத்தியுள்ளோம். தன்னாட்சி என்பது அதனையே.
எமது மக்கள் தங்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் நாங்கள். ஆகவே பிச்சைப் பாத்திரம் ஏந்தாமல் எம்மை நாமே விருத்தி செய்து கொள்ள, அபிவிருத்தி அடைய, எம் மக்களை நாம் நாடி அவர்களுக்குத் தம்மீது நம்பிக்கை கொள்ளச் செய்து சமூக அபிவிருத்திக்கு அடிகோலுபவர்கள் நாங்கள். தேர்தல்களில் வென்றாலும் தோற்றாலும் சமூகப் பணி தொடர்ந்து கொண்டு தானிருக்கும்.
“ஒருவருக்கு மீனைக் கொடுப்பதிலும் பார்க்க மீன் பிடிக்க அவருக்குச் சொல்லிக் கொடு. அவரின் வாழ்க்கை பூராகவும் அது அவருக்கு நன்மையை பெற்றுத் தரும்” என்றார் அரிமா சங்கத்தின் தலைவரொருவர் பல வருடங்களுக்கு முன். அவ்வாறான தற்சார்பு முயற்சிகளில் எமது மக்கள் ஈடுபட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
சில காலத்திற்கு முன் அதாவது கொரோனா எம்மைத் தாக்க வந்த காலத்தில், நான், இனி வருங்காலங்களில் பொருட்களின், மரக்கறிகளின் விலைகள் உயரும் என்று கண்டு எம் மக்களை வீட்டுத் தோட்டங்களில் ஈடுபடுமாறு வேண்டிக் கொண்டேன். பலர் வீட்டுத்தோட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். நான் வெறுமனே இதைக் கூறிவிட்டு இருக்கவில்லை. பல மரக்கறி வகைகள் என் வீட்டுத் தோட்டத்தில் தொட்டிகளில் வளர்கின்றன. கத்தரி, போஞ்சி, வெண்டை, அவரை, புடலங்காய் போன்ற மரக்கறிகளும், மிளகாய், கீரை வர்க்கங்களும் தற்போது எமக்கு எமது வீட்டுத் தோட்டத்தில் இருந்தே கிடைக்கின்றன. எமது திருநெல்வேலி அலுவலகத்தில் மரவள்ளி, வாழை பெருமளவில் நாட்டியிருக்கின்றேன். மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் நாங்கள் மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாகவும் விளங்க வேண்டும். எமது கட்சியின் சிறப்புக்களில் இதுவும் ஒன்று.
அடுத்து தன்நிறைவு. இது ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களிடையே வளர வேண்டிய ஒரு கருத்தாகும். ஏன் சிங்கள மக்களையும் மற்றையவர்களையுங் கூட இந்தக் குறிக்கோளுடன் இணைத்துக் கொள்ளலாம். எம்மால் உள்நாட்டில் வளர்க்கக் கூடிய, செய்யக் கூடிய, தயாரிக்கக் கூடியவற்றை நாம் இங்கு தயாரித்து தன்நிறைவு பெற்று அதிகப்படியானவற்றை ஏற்றுமதி செய்ய வேண்டும். எந்த ஒரு பொருளுக்கும் பண்டத்திற்கும் வெளிநாடுகளில் இருந்து அவற்றை எதிர்பார்க்கும் பழக்கத்தை நாங்கள் கைவிட வேண்டும். என் நண்பரொருவர் உலக வங்கி நிபுணர். நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் நெற்பயிரை வடமாகாண விவசாயிகள் பயிர் செய்வதை அவர் கண்டித்து வெளிநாட்டில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கக் கூடிய நெல்லை ஏன் வீணாகக் கூடிய விலையில் இங்கு பயிரிடுகின்றீர்கள்? உங்களுக்கு நட்டம் தரும் நடவடிக்கைகளில் ஏன் ஈடுபடுகின்றீர்கள் என்று கேட்டார்.
அதற்கு நான், எங்களை, எங்கள் பாரம்பரியத் தொழிலில் ஈடுபட வைக்க பல காரணங்கள் உண்டு என்றேன். ஒன்று, வெளிநாட்டு அரிசி எமக்கு ஏற்றதல்ல. தாய்லாந்து வெள்ளை அரசியை எங்கள் மக்கள் விரும்புவதில்லை. சிவத்த உள்ளூர் அரிசியையே நாடுகின்றார்கள்.
இரண்டு – போர், நோய், பொருளாதாரப் பின்னடைவுகள் போன்றவற்றின் காரணமாக உலக ரீதியாகத் தாக்கங்கள் ஏதும் ஏற்படும் போது எம் மக்கள் பட்டினி கிடக்க வேண்டி வரும் என்றேன். நாங்கள் எமது உணவில் தன்னிறைவு காண வேண்டும் என்றேன். “நெற் பயிரிடுகைளில் நாங்கள் நவீன முறைகளைக் கையாளலாம். பெறுமதியைக் கூட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம். ஆனால் நெற்பயிர்ச் செய்கையை நிறுத்தி மறுபயிர்ச் செய்கையில் ஈடுபடுவது சரியென்று எனக்குப்படவில்லை” என்றேன். கொரோனா அண்மையில் எனது கூற்றை மெய்ப்பித்திருந்தது. ஆகவே தன்னிறைவு பெறுவது எமது முக்கிய ஒரு குறிக்கோளாக இருக்க வேண்டும். அதற்காக நாம் உழைக்க வேண்டும். கட்சியாக நாங்கள் அவ்வாறு உழைத்து வருகின்றோம்.
எமக்கு கொள்கைகள் உண்டு. அங்கத்தவர்களின் ஆர்வம் நிறைய உண்டு. எம் மக்கள் மீது அன்பும் கரிசனையும் உண்டு. சிந்தனையில் தூய்மையுண்டு. இதைக் கண்டதால் எம் மக்களின் நிதி உதவியும் உண்டு. இவை தான் எமது விசேட குணவியல்புகள்!