29.8 C
Jaffna
March 29, 2024
விளையாட்டு

இந்தியாவை இலகுவாக வீழ்த்தியது இங்கிலாந்து!

அகமதாபாத்தில் நேற்று நடந்த முதலாவது ரி20 போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி.

முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் சேர்த்தது. 125 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

3 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. இங்கிலாந்து அணி ரி20 போட்டியில் தொடர்ந்து பெறும் 4வது வெற்றி இதுவாகும். அதேசமயம், இந்திய அணி ரி20 போட்டியில் தொடர்ந்து 2வது தோல்வியைச் சந்தித்துள்ளது.கடந்த 10 ரி20 தொடரில் 8 முறை, முதல் ஆட்டத்தில் இந்திய அணி தோற்றுள்ள நிகழ்வு இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது.

இந்திய அணியின் தோல்விக்கு தவறான கப்டன்ஷி முடிவும், ரொப்ஓர்டர் பேட்டிங்கில் சொதப்பியதும்தான் காரணம். கப்டன் விராட் கோலி நேற்றுமுன்தினம் வரை ரோஹித் சர்மா, ராகுல்தான் ஆட்டத்தைத் தொடங்குவார்கள் என உறுதியாகக் கூறிவிட்டு ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளித்தது ஏன் எனத் தெரியவில்லை.

கப்டன் கோலி கடந்த ஒரு மாதத்தில் 3வது முறையாக டக்அவுட் ஆகியுள்ளார். சென்னை டெஸ்டில், அகமதாபாத்தில் நடந்த 4வது டெஸ்ட் நேற்றைய ஆட்டத்தில் டக்அவுட் என கோலியின் பேட்டிங் ஃபோர்மும் மீதும் கேள்வி எழுப்ப வேண்டியதுள்ளது.

ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் உட் போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் மணிக்கு 140 கி.மீ வேகத்துக்கு அதிகமாக வீசக்கூடியவர்கள். இவர்களின் பந்துகளி்ள் ஷொட் அடிக்கும் போது பேட்ஸ்மேன் பேட்டை இறுக்கமாகப் பிடிப்பதும், பந்து போகும் போக்கில் காலை நகர்த்தி ஆடுவதும் அவசியம். சச்சின், கங்குலி போன்ற ஜாம்பவான்கள் இதை மிகத்துல்லியமாகச் செய்வார்கள்.

ஆனால், கே.எல்.ராகுல் பேட்டை இறுகப் படிக்காமல் இருந்ததாலும், முன்னங்காலை நகர்த்தாமல் ஆடியதால் பேட்டில் பட்டு போல்டாகியது. அதிலும் தொடக்கத்திலிருந்தே திணறிய தவண், தேவையில்லாமல் ஷொட் ஆடி விக்கெட்டை இழந்தார்.

ஜோப்ரா ஆர்ச்சர், ஜோர்டான், மார்க் உட் ஆகியோர் சராசரியாக 145 கி.மீ வேகத்தில் பந்துவீசுகிறார்கள். அதிலும் மார்க் உட் 150 கி.மீ வேகத்தைக் கடந்து சில நேரங்களில் பந்துவீசினார். இதுபோன்ற மிரட்டலான பந்துவீச்சை கோலி நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

ஆனால், பும்ரா, ஷமி இல்லாதது, பல் இல்லாத வேகப்பந்துவீச்சு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. புவனேஷ்வர் குமார், தாக்கூர் இருவரும் என்னதான் வீசினாலும், 130 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லவில்லை, ஸ்விங்கும் ஆகவில்லை. சுழற்பந்துவீச்சை மட்டுமே ஆட்டத்தை நகர்த்திவிடுவோம் என நினைத்துவிட்டாரா கோலி.
இனியும் காத்திருக்காமல் பெஞ்சில் அமரவைக்கப்பட்டிருக்கும் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், திவேட்டியா ஆகியோரை களமிறக்க வேண்டும். ஷிகர் தவணுக்கு ஓய்வு அளித்து ஓரம் கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஸ்ரேயாஸ் அய்யர் மட்டும் இல்லாவிட்டால் இந்திய அணியின் மதிப்பு, கவுரவம் முதல்ஆட்டத்திலேயே காற்றில் பறந்திருக்கும். ரிஷப்பந்த் அருமையான ஃபோர்மில் இருப்பதை நிரூபித்துவிட்டார், ஷொட் செலக்ஸன் மட்டும் சரியாக இருந்திருந்தால், நேற்று பட்டையை கிளப்பி இருப்பார்.

அதிலும் 140 கி.மீ வேகத்தில் வீசிய ஜோப்ராஆர்ச்சரின் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப்பில் ஆடிய ரிஷப்பந்த்தின் துணிச்சல் பாராட்டுக்குரியது. டெஸ்ட் போட்டியில் ஆன்டர்ஸனை மிரளவிட்ட பந்த், ரி20 போட்டியில் ஆர்ச்சரை அசரவைத்துவிட்டார். ஹர்திக் பாண்டியா பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் விளையாட ஃபோர்முக்கு வரவில்லை.

125 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் ஜேஸன் ரோயை ஐபிஎல் ஏலத்தில் எந்த அணி நிர்வாகமும் விலைக்கு வாங்கவில்லை. ஆனால், தன்னுடைய பேட்டிங் ஃபார்மை முதல் போட்டியில் வெளிப்படுத்தி பாடம் நடத்திவிட்டார்.

பவர்ப்ளேயில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 22 ரன்கள் சேர்த்தபோது, இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் பட்லர், ரோய் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களுக்கு கொண்டு சென்றுவிட்டனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 72 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். சஹல் பந்துவீச்சில் பட்லர் 28 ரன்னில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அடுத்து டேவிட் மலான் களமிறங்கினார்.

அரைசதம் நோக்கி நகர்ந்த ரோய், 32 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்த நிலையில், சுந்தர் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். மலான் 24, பேர்ஸ்டோ 26 ரன்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.15.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து அணி 8 விக்கெட்டில் வென்றது.

முன்னதாக, ரொஸ் வென்ற இங்கிலாந்து கப்டன் மோர்கன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. பவர்ப்ளே ஓவருக்குள் தவண் (4), ராகுல் (1), கோலி (0) ஆகியோரின் விக்கெட்டுகள் சரிந்தன. 22 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. ரி20 கிரிக்கெட்டில் பவர்ப்ளேயில் சேர்க்கப்பட்ட 3 வது மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும்.

4 வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் இணைந்து அணியை மீட்டெடுத்தனர். அதிரடியாகத் தொடங்கிய பந்த் 21 ரன்னில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் டீப் லெக் ஸ்கொயரில் பேர்ஸ்டோவிடம் கட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் அய்யர் ஓரளவுக்கு தாக்குப்பிடித்தனர். மிகவும் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சை லாவகமாகக் கையாண்டார். ஸ்ரேயாஸ் அய்யரின் ஒவ்வொரு ஷொட்டும், அற்புதமாக இருந்தது.

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் 36 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஹர்திக் பாண்டியா ஒரு சிக்ஸர், பவுண்டரியுடன் 19 ரன்னில் ஆர்ச்சர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். தாக்கூர் வந்த வேகத்தில் ஆர்ச்சர் பந்தில் அதிரடியாக ஆட முற்பட்டு விக்கெட்டை இழந்தார்.

ஸ்ரேயாஸ் அய்யர் 67 ரன்னில் ஜோர்டான் பந்துவீச்சில் மலானால் கட்ச் பிடிக்கப்பட்டு வெளியேறினார். கடைசி 15 ரன்களுக்கு மட்டுமே இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தது.

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் சேர்த்தது இந்திய அணி. இங்கிலாந்து அணித் தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குஜராத்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே!

Pagetamil

தோல்வியின் பிடியில் பங்களாதேஷ்

Pagetamil

இரண்டாவது இன்னிங்ஸிலும் தனஞ்ஜய, காமிந்து சதம்: பங்களாதேஷின் வெற்றியிலக்கு 510

Pagetamil

பங்களாதேஷ் அணி 188 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது!

Pagetamil

சிஎஸ்கே புதிய கப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

Pagetamil

Leave a Comment