விறகு சேகரிக்கச்சென்று காணாமல் போன இளைஞனை மோப்ப நாயின் உதவியுடன் தேடும் பணியில் பொகவந்தலாவ பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து ஈடுபட்ட போதும் இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ குயினா மேல்பிரிவை சேர்ந்த திருச்செல்வம் பிரபாகரன் (26) என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
கடந்த 09 ஆம் திகதி காலை 10 மணியளவில் விறகு சேகரிப்பிற்காக போபத்தலாவ வனப்பகுதிக்குள் சென்றவர் திரும்பி வரவில்லை என பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் உறவினர்களால் கடந்த 10 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டையடுத்து காணாமல் போன இளைஞனை தேடும் பணியில் பொது மக்களும் பொலிஸாரும் இரண்டு நாட்களாக போபத்தலாவ காட்டுப்பகுதிக்குள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுட்ட போதும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.
நேற்று பொகவந்தலாவ பொலிஸாரினால் ஹட்டன் பொலிஸ் நிலையத்திலிருந்து மோப்ப நாயை வரவழைந்து போபத்தலாவ வனப்பகுதிக்குள் சுமார் 06 மணித்தியாலங்கள் பொலிஸாரும் பொது மக்களும் பாரிய தேடுதல் நடவடிகையில் ஈடுபட்டுள்ளனர்.
சீரற்ற வானிலைக்கு மத்தியில் காலை முதல் ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இதுவரையில் குறித்த இளைஞனை கண்டுப்பிடிக்க முடியவில்லை எனவும் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் தன்னுடைய கையடக்க தொலைபேசியை எடுத்து சென்றிருந்தார். அவரது தொலைபேசிக்கு வந்த அழைப்புக்களின் அடிப்படையிலும் விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிசார் தெரித்தனர்.
இதேவேளை காணாமல் போன இளைஞன் தனது குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையெனவும் பொலிஸார் தெரிவித்ததோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.