மட்டக்களப்பு – ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மரணமடைந்தவரின் மனைவியும் மகனும் மற்றும் இரு பெண் பிள்ளைகளும் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
கணேஸ் யோகராசா (43) என்பவரே கொல்லப்பட்டவரென பொலிஸார் கூறினர்.
அண்மையில் இவர் குடும்ப உறவினர்களினால் தாக்கப்பட்டு கையில் முறிவு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று பிற்பகல் முரண்பாடு முற்றியுள்ளது.
அவரது மனைவியும் பிள்ளைகளும் இரும்புக்கம்பி மற்றும் பொல்லு போன்றவற்றினால் தலையில் சரமாரியாகத் தாக்கியதில் படுகாயமடைந்த இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவேளை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது உடம்பு, வாய் பகுதிகளில் அலவாங்கால் குத்தப்பட்ட காயங்கள் காணப்படுகிறது. அவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்ல்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட பெண்ணும் அவரது 23 வயதுடைய மகனும் வைத்திய சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 15, 17 வயதுடைய இரு பெண் பிள்ளைகளும் ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.