பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் ஓரணியிலும், திமுக, விசிக, மதிமுக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொமதேக ஆகிய கட்சிகள் இன்னொரு அணியிலும் தேர்தலை எதிர்கொள்கின்றன. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேசியக் கட்சியான பாஜக இடம்பெற்றுள்ளது. 234 தொகுதிகளில் பாஜகவுக்கு 20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது.
இதற்கிடையே திருப்பதி சென்ற பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சுப்பிரமணியன் சுவாமி பதிலளிக்கும்போது,
”பாஜக தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டிருக்க வேண்டும். ஒரு அகில இந்தியக் கட்சி, மாநிலக் கட்சிகளிடம் காக்காய் பிடித்து 5, 10 அல்லது 20 சீட்டுகளுக்காகக் கெஞ்சுவது எனக்குத் தாங்க முடியவில்லை. அதனால் ஒதுங்கி இருக்கிறேன். பாஜக 2 அல்லது 3 தொகுதிகளில் வெற்றி பெறலாம். அல்லது ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது. போன முறையே எத்தொகுதியிலும் வெற்றி பெறவில்லை” என்று தெரிவித்தார்.