ஆட்டமிழப்பிற்காக என்னிடம் பொலார்ட் மன்னிப்பு கோரினார் என தனுஷ்க குணதிலக தெரிவித்துள்ளார்.
இலங்கையுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடியது.
20 ஓவர் வரை விக்கெட் இழப்பின்றி சதக்கூட்டணி அமைத்தனர் தொடக்க வீரர்கள் தனுஷ்க குணதிலக, திமுத் கருணாரத்ன ஆகியோர். ஆனால், இறுதியில் 49 ஓவர்கள் முடிவில் 232 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்தது.
தொடக்க வீரர்கள் தனுஷ்க குணதிலக 55, திமுத் கருணாரத்ன 52, அஷேன் பண்டார 50 ஓட்டங்களை பெற்றனர். இதற்கடுத்த அதிகபட்ச ஓட்டம் பந்துவீச்சாளர் லக்சன் சந்தகன் பெற்ற 16 ஓட்டங்கள்தான். பழம்பெருமை பேசியே அணியில் நீடிக்கும் மத்யூஸ் 5, சந்திமல் 12 ஓட்டங்களை பெற்றனர்.
பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டனர், ஜேசன் மொகமட் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பதிலளித்தாடிய மேற்கிந்திய தீவுகள் எந்த சிரமமுமில்லாமல், 47 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 236 ஓட்டங்களை பெற்றது. ஷாய் ஹோப் 110, எவின் லூயிஸ் 65 ஓட்டங்களை பெற்றனர்.
துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.
இலங்கை ஆடிக்கொண்டிருந்த போது, தனுஷ்க குணதிலகவின் ஆட்டமிழப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. களத்தடுப்பிற்கு இடையூறாக இருந்தார் என பொலார்ட் முறையிட, 3வது நடுவர் ஆட்டமிழப்பை வழங்கினார். ஐ.சி.சி விதிமுறை 37 இன் கீழ் ஆட்டமிழப்பு வழங்கப்பட்டது.
இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆட்டம் முடிந்த பின்னர் பொலார்ட், தனுஷ்க அளவளாவும் புகைப்படங்களை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தனுஷ்க குணதிலக கூறுகையில், “அவர் (பொலார்ட்) என்னிடம் மன்னிப்பு கோரினார். அந்த நேரத்தில் அவர் அதை சரியாகப் பார்க்கவில்லை என்று என்னிடம் கூறினார். வீடியோவைப் பார்த்த பிறகுதான் நான் எதுவும் செய்யவில்லை என்று அவர் உணர்ந்தார் ” என தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் விதிமுறைகளை பேணும் Marylebone Cricket Club இந்த சம்பவத்தை தொடர்ந்து, கிரிக்கெட் விதிமுறைகள் பற்றிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
📺 @stephenfry provides more information on the Obstructing the field Law ⬇️
View our Laws in full: https://t.co/EyxKtnx0i2.#MCCLaws pic.twitter.com/hOp1iHxA5t
— Marylebone Cricket Club (@MCCOfficial) March 10, 2021