ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் பாவனைக்கு இரண்டு ஹெலிகொப்டர்கள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக இன்று (10) நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம் இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் ஹெலிகொப்டர் விடயத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஜனாதிபதி மற்றும் அவரது அலுவலகத்தால் விமானப்படை சேவைகளைப் பயன்படுத்துவது குறித்து எம்.பி. விதானகே கேள்வி எழுப்பினார். சுமார் 10 வரையான அரச நிறுவனங்களினால் ஹெலிகொப்டர் பயன்பாட்டிற்கான நிதி இன்னும் வழங்கப்படாத நிலையில், இந்த காலகட்டத்தில் சில சுற்றுப்பயணங்களில் ஜனாதிபதிக்கு இரண்டு ஹெலிகொப்டர்கள் ஏன் வழங்கப்பட்டன என்று கேள்வி எழுப்பினார்.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தல்களின் போது, அரச சொத்துக்களின் பயன்பாட்டைக் குறைப்பதாக உறுதியளித்தார். ஜனாதிபதி இதுவரை தனது பதவிக் காலத்தில் இதுபோன்ற மாற்றங்களைச் செய்தாரா என்று கேள்வி எழுப்பினார்..
ஏற்கனவே காலதாமதமான கொடுப்பனவுகளை விமானப்படையினரால் வசூலிக்க முடியாத நிலையில், எதிர்காலத்தில் இந்த நடைமுறை தொடருமா என்று எம்.பி. ஹேஷா விதானகே கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சாமல் ராஜபக்ஷ, பாதுகாப்பு நோக்கங்களுக்காக ஜனாதிபதிக்கு இரண்டு ஹெலிகொப்டர்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
வீதியில் பயணிக்கும்போது ஜனாதிபதி மூன்று வாகனங்களுடன் மட்டுமே பயணிக்கிறார், முந்தைய நடைமுறையைப் போல ஒரு பெரிய வாகனத் தொடரணியுடன் அவர் செல்லவில்லை. பழைய பாரம்பரிய நடைமுறைகளைத் திருத்துதல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல கொள்கை மாற்றங்களை ஜனாதிபதி செய்துள்ளார் என்று இராஜாங்க அமைச்சர் சாமல் ராஜபக்ஷ கூறினார்.
இதேவேளை, ஹேஷா விதனகே உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவரை முகக்கவசத்தை அணியுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவுறுத்தினார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, சபாநாயகர் பக்கச்சார்பாக நடந்து கொள்வதாக சுட்டிக்காட்டினார். விவாதத்தில் ஈடுபட்ட இராஜாங்க அமைச்சர் சாமல் ராஜபக்ச முகக்கவசமில்லாமல் பதிலளிக்க அனுமதித்த சபாநாயகர், கேள்வியெழுப்பும் ஹேஷா விதானகேவை மட்டும் முகக்கசவம் அணிய அறிவுறுத்துவது பக்கச்சார்பானது என சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற அமர்வுகளில் பக்கச்சார்பற்ற நிலையில் இருப்பது சபாநாயகரின் பொறுப்பு. நாடாளுமன்ற சபாநாயகர் இவ்வளவு பக்கச்சார்பாக நடந்து கொள்வது வெட்கக்கேடானது என்று எமனுஷ நாணயக்கர சுட்டிக்காட்டினார்.