சிறிலங்காவின் சித்திரவதைகளுக்கான பொறுப்புக்கூறல் என்பது சர்வதேச வழக்கு மூலம் மட்டுமே அடைய முடியும் என்பதோடு, இதற்கு காரணமானவர்களை சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்தி, தண்டிப்பதற்கு முன்வருமாறு சர்வதேச நாடுகளை வேண்டுகிறோம் என ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.
சிறிலங்காவின் ஆயுதப்படைகளின் சித்திரவதைகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலையில், உள்நாட்டு சட்டங்களில் உள்ள இறைமையின் அடிப்படையிலான விதிவிக்கு சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வந்து வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் என அனைத்து ஜனநாயக நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.
ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளரது Nils Melzer ( torture and other cruel, inhuman or degrading treatment or punishment தொடர்பிலான அமர்வின் போது, ACCP அனுசரணையுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளும், தொகையான கொடுரங்கள், இனஅழிப்புக்கு எதிரான செயற்பாடுகளுக்கான அமைச்சர் மகிந்தன் சிவசுப்ரமணியம் அவர்கள் காணொளிப்பதிவின் ஊடாக உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சித்திரவதைகளைப் பயன்படுத்துவது இன்றும் நடைமுறையில் உள்ளதோடு, 2016ம் ஆண்டின் பிற்பகுதியில் கைது செய்யப்பட்டவர்களின் 80 வீதமான தமிழர்கள் கைதான பின்னர் சித்திரவதை மற்றும் உடல் ரீதியான கொடுமைகள் இழைக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளார்கள் என 2017ம் ஆண்டில் இலங்கைக்கு பயணம் செய்த ஐ.நா.வின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான முன்னாள் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து தன்னிச்சையான கைதுகள், நீதிக்கு புறம்பான படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்குதல், காவலில் வைக்கப்பட்டோரை பாலியல் வல்லுறவுக்க உட்படுத்தல்,விசாரணையின்றி சித்திரவதை மற்றும் நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைத்தல் உள்ளன என்பதோடு இவை அனைத்தும் தமிழர்களை விகிதாசாரமாக பாதிக்கிறது என்று தனது 2017ம் ஆண்டு The Freedom House அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சித்திரவதை என்பது சிறீலங்காவில் இரத்தத்தில் ஊறி உள்ளது. சிறீலங்காவில் சித்திரவதை செய்பவர்களை தண்டிப்பது ஒரு கடுமையான பிரச்சினையாகவே இருந்து வருகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கைகளில் பலமுறை கூறியுள்ளது. இதனால் சித்திரவதைக்கு பொறுப்புக்கூறல் சர்வதேச வழக்கு மூலம் மட்டுமே அடைய முடியும். சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்தி, சிறீலங்காவின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களைத் தண்டிப்பதற்கு முன்வருமாறு சர்வதேச நாடுகளை வேண்டுகிறோம்.
சிறிலங்காவிலும் மற்றும் பல நாடுகளிலும் சித்திரவதை அரசுகளினால் தான் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்படுகின்றது. ஆகவே, தங்கள் ஆயுதப்படைகளால் செய்யப்பட்ட சித்திரவதைகளுக்கு அரசுகளே பொறுப்பேற்க வேண்டும். ஆகவே உள்நாட்டு சட்டங்களில் உள்ள இறைமையின் அடிப்படையிலான விதிவிக்கு சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வருவதன் ஊடாக, பாதிக்கப்பட்டவர்கள் வழக்குகளைத் தொடுத்து தமக்கான பரிகாரநீதியினை பெறுவதற்கு வழிகோல ஜனநாயக நாடுகளை வேண்டுகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் மகிந்தன் சிவசுப்ரமணியம் தனதுரையில் தெரிவித்திருந்தார்.