துபாய் செல்வதற்காக நேற்று கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு அங்கு இரண்டு மணித்தியாலங்கள் தரித்திருக்க நேர்ந்துள்ளது.
விமானநிலையம் சென்ற விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச அது தொடர்பான நீதிமன்ற உத்தரவு விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுக்கு கிடைக்காத காரணத்திற்காக இரண்டு மணித்தியாலங்கள் அங்கு தரித்திருக்க நேர்ந்துள்ளது.
நேற்றுக் காலை 8.30 மணியளவில் ஏற்றுமதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி. வி. ஜானகவுடன் அமைச்சர் நாமல் ராஜபக்ச விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனத்தின் 651ஆம் இலக்க விமானத்தில் பயணிப்பதற்காக அவர்கள் விமான நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில் விமானம் புறப்படும் நேரம் 9.30 என அறிவிக்கப்பட்டிருந்தது. அதுவரை மேற்படி நீதிமன்ற ஆவணம் தமக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் விமானத்தில் பயணிப்பதற்கான அனுமதியை வழங்கமுடியாது என்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை நீதிமன்றம் கடந்த 4ஆம் திகதி அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதியை வழங்கியிருந்த நிலையில் மேற்படி குடிவரவு குடியகல்வு அதிகாரிக்கு அது தொடர்பான உத்தரவு கிடைக்காத நிலையிலேயே அமைச்சர் விமான நிலையத்தில் இரண்டு மணித்தியாலங்கள் தரித்திருக்க நேர்ந்துள்ளது. எவ்வாறாயினும் மேற்படி உத்தரவு அந்த அதிகாரிக்கு பின்னர் கிடைத்துள்ள நிலையில், அமைச்சர் நாமல் ராஜபக்ச முற்பகல் 10.46 மணியளவிலேயே துபாய் நோக்கி பயணித்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.