எத்தனை தடைகள் விதித்தாலும், உலகிலிருந்து தனிமைப்படுத்தினாலும் எமக்கு கவலையில்லை என மியான்மர் இராணுவம் அறிவித்துள்ளது.
மியான்மரில் அமுலாகியுள்ள சட்டவிரோத இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தை ஒடுக்க இராணுவம் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பலப்பிரயோகங்களை பிரயோகிக்கிறது.
இதற்கு ஐ.நா மற்றும் உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மியான்மர் மீது பல தடைகளை விதிக்க உலக நாடுகள் தயாராகி வருகின்றன.
அங்கு நிலவும் அவசரநிலை குறித்து 15 உறுப்பினர்கள் அடங்கிய ஐநா பாதுகாப்பு சபை கவலை தெரிவித்தபோதும், ரஷ்யா மற்றும் சீனாவின் எதிர்ப்பால் கண்டனம் தெரிவிக்க இயலவில்லை. அது, மியன்மாரின் உள்நாட்டு விவகாரம் என்று ரஷ்யாவும் சீனாவும் கூறி வருகின்றன.
மியன்மாரில் ஜனநாயகத்தை மீட்க மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அந்நாட்டிற்கான ஐநா சிறப்புத் தூதர் கிறிஸ்டின் ஸ்ரானர் பர்கனர் உலக நாடுகளை வலியுறுத்தி இருக்கிறார்.
ஆயினும், எத்தகைய தடைகளை விதித்தாலும் மற்ற நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தினாலும் அதை எதிர்கொள்ளத் தயார் என மியன்மார் இராணுவம் தெரிவித்துள்ளதாக பர்கனர் கூறினார்.