தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளிற்கு தெரியாமல்- அவர்களின் பெயரை பயன்படுத்தி- கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிக்கை வெளியிட்டது அம்பலமாகியுள்ளது.
மனித உரிமைச் சபையில் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆற்றிய உரைக்கு பதில் அளிக்கும் முகமாக சம்பந்தர் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையில், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கையொப்பமிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்த போதும், தமது பரிசீலனைக்கு அறிக்கை தரப்படாமல் வெளியிடபபட்டதாக ரெலோ அறிவித்துள்ளது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
ஜெனிவா கூட்டத்தொடரில் மனித உரிமைச் சபையின் அமர்வில் தமிழ் மக்களுக்காக நீதிகோரி கொண்டுவரப்பட இருக்கின்ற பிரேரணையில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் அடங்கிய கோரிக்கையை மூன்று தமிழ் தேசிய கட்சிகளின் கூட்டுத் தலைமைகள், சமூக அமைப்புக்கள் மற்றும் மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டு அங்கத்துவ நாடுகளுக்கு அனுப்பி வைத்திருந்தோம்.
இருப்பினும் மாதிரி வரைபிலே நாம் கோரிக்கை விடுத்த முக்கியமான விடயங்கள் உள்வாங்கப்படாமலும், முந்தைய பிரேரணைகளிலிருந்த உறுதியான பல சரத்துக்கள் தவிர்க்கப்பட்டமையையும் அவதானித்து இருந்தோம்.
சமர்ப்பிக்கப்பட இருக்கும் பிரேரணை பலமான உறுதியான சரத்துக்களை உள்ளடக்கியதாக அமையுமிடத்தில் தான் நம்முடைய இனத்திற்கான நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என்ற வகையில் அதை பலப்படுத்தும் வகையாக தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இருப்பவர்களும், சர்வதேச உறவுகள்மற்றும் சமூகமும், இணை அனுசரணை நாடுகளும் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
இந்த இக்கட்டான, இறுதி வரைவின் வடிவம் என்னவென்று தெரியாமல் இருக்கின்ற சூழ்நிலையிலே இருக்கின்ற வரைபை பிரேரணையாக வெற்றிகரமாக நிறைவேற்றும்படி இணை அனுசரணை நாடுகளை கோருவது எமது முயற்சியை பலமிழக்கச் செய்வதோடு குழப்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்துவது மாத்திரமல்லாமல் எமது மக்களின் நீதிக்கான போராட்டத்தினையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி கிடைப்பதையும் பலவீனமடையச் செய்யும்.
ஆகவே இந்த அறிக்கைக்கு நாம் ஒருபோதும் இணங்க மாட்டோம்.
மனித உரிமைச் சபையில் அங்கத்துவ நாடுகளிடம் எமது மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையான பலமான சரத்துக்களை உள்ளடக்கிய பிரேரணையை நிறைவேற்றுமாறு கோரிக்கை வைப்பதுதான் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி நிற்கும் எமது மக்களுக்கு நாம் செய்யும் தலையாய கடமையாக இருக்கும். தவிர அரச பிரநிதிகள், அமைச்சருடைய கருத்துக்களுக்கு பதில் அளிப்பதில் நேரம் கடத்துவது சரியான ஒன்றாக இந்த நேரத்தில் அமையாது.
எமது ஒன்றிணைந்த கோரிக்கைகளயும், ஐ.நா. மனித உரிமை உயர் ஸ்தானிகரது அறிக்கையிடப்பட்ட விடயங்களையும் உள்ளடக்கியதாக மனித உரிமைச் சபையில் எமது மக்களுக்கான நீதியை உறுதிப்படுத்துவதாகவே சமர்ப்பிக்கப் படுகின்ற பிரேரணை அமைய வேண்டும் எனவும் அதை வெற்றி பெற வைக்க வேண்டும் எனவும் அங்கத்துவ நாடுகளை நாம் கோருகிறாம். இதுவே எமது நிலைப்பாடு.
எமது மக்களின் நீதிக்கான உரிமைக்கான போராட்டத்தில் எமது கட்சி தொடர்ந்தும் உறுதியுடன் பயணிக்கும் என தெரிவித்துள்ளார்.
பங்காளி கட்சிகளின் தலைவர்களும் கையொப்பமிட்டதாக குறிப்பிட்டு, இரா.சம்பந்தன் தனக்கு நெருக்கமான ஊடகங்களிற்கு மட்டும் நேற்று (6) இந்த அறிக்கையை அனுப்பியிருந்தார். அறிக்கை தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளை தமிழ் பக்கம் இன்று காலை தொடர்பு கொண்டு வினவியபோது, அவர்கள் யாரும் உள்ளடக்கத்தை அறிந்திருக்கவில்லை.
பங்காளி கட்சிகளின் தலைவர்களின் கையொப்பத்துடனான அறிக்கை ஊடகங்களிற்கு அனுப்பிய பின்னரே, கையொப்பமிட்டதாக குறிப்பிடப்படும் தலைவர்கள் அறிந்து கொள்வது கூட்டமைப்பிற்குள் நிலவும் மோசமான ஜனநாயகமின்மையை சுட்டிக்காட்டுகிறது. இந்த குற்றச்சாட்டை நீண்டகாலமாக சுமத்தியே பலர் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.