சிகிரிய பகுதியில் பெறுமதிமிக்க காணிகளை கிரிக்கெட் வீரர் ஒருவர் வாங்கிய விவகாரத்தில் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். அத்துடன், இதுவரை வழங்கப்பட்ட பத்திரங்களை உடனடியாக இரத்து செய்யுங்கள் என மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே உத்தரவிட்டுள்ளார்.
நேற்று (05) நடைபெற்ற மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இந்த உத்தரவுகளை வழங்கினார்.
இது மிகவும் மோசமான செயல். குறைந்த வருமானம் உடையவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலங்களை இந்த முறையில் தவறாகப் பயன்படுத்தப்படுவது ஒரு மோசமான சூழ்நிலை. சம்பந்தப்பட்ட நிலங்களை வழங்கும் செயல்களை ரத்து செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய மாகாணத்திலும், மாத்தளை மாவட்டத்திலும் நிலமற்ற மக்களுக்கு நிலங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என ஆளுநர் வலியுறுத்தினார்.
சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து வருவதாகவும், தொடர்புடைய கிராமசேவகர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.
கிராமசேவகரின் பிள்ளையை கண்டியிலுள்ள பிரபலமான பாடசாலையில் சேர்க்க கிரிக்கெட் வீரர் நடவடிக்கையெடுத்ததாக தகவல் கிடைத்துள்ளதாக ஆளுனர் தெரிவித்தார்.