சமுர்த்தி திட்டத்தை யாழ்ப்பாணத்திற்கு ஒரு நெருக்கடியான சூழலில் நானே கொண்டுவந்தேன். சமுர்த்தி செயற்பாடுகளுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் தொடர்புகள் இருக்கலாம். ஆனால் எவரும் தமது சுயநலன்களுக்காக இந்த வேலைத்திட்டத்தை நடத்த முற்படக்கூடாது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (06) நடைபெற்ற சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சௌபாக்கியா வாரத்தினை அங்குரார்ப்பணம் செய்து பயனாளிகளுக்கு உதவித்திட்ட காசோலைகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்.
“யாழ். மாவட்ட மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரின் பெயரால் அவரின் இணைப்பாளர்கள் எனப்படுவோர் மிரட்டல் விடுப்பதாகவும், அழுத்தம் கொடுப்பதாகவும் பல முறைப்பாடுகள் எனது கவனத்திற்கு கொண்டு வரப்படுகின்றன.
அவ்வாறான அநாகரீகமான செயற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருக்கு தெரிந்து நடக்கின்றதா, தெரியாமல் நடக்கின்றதா என்பது தொடர்பாக அவருடன் கலந்துரையாடவுள்ளேன். அவருக்கு தெரியாமல் நடக்குமாக இருந்தால், இவ்வாறான அநாகரிகமான செயலை அவர் கட்டுப்படுத்த வேண்டும்.
மாறாக, அவருக்கு தெரிந்துதான் அரச அதிகாரிகளுக்கான மிரட்டலும்,அழுத்தங்களும் அவரது இணைப்பாளர்களால் விடுக்கப்படுமானால் அது தொடர்பில் ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் பேசி முடிவொன்றைக் காண்பேன்.
யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல கிளிநொச்சி அதிகாரிகளிடமும் அழுத்தங்கள பிரயோகித்திருக்கின்றனர். எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை யாழ். அரசாங்க அதிபரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு ஆலோசனை கூறியிருக்கின்றார்கள்.
ஆனால் சிரேஸ்ட அதிகாரியான கிளிநொச்சி அரச அதிபர் தகுந்த யாருடைய ஆலோசனையையும் கேட்கும் அவசியம் தனக்கு இல்லை என்று தகுந்த பதில் அளித்துள்ளார்.
யாழ். கிளிநொச்சி மக்களினால் தொடர்ச்சியாக தெரிவு செய்யப்பட்டு சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும், சிரேஸ்ட அமைச்சராகவும் இருக்கின்ற என்னை இந்த மக்களிடம் இருந்து சண்டித்தனத்தினால் பிரித்து விடமுடியாது.” என்று கூறிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “நான் தூரத்தே இருந்து வேடிக்கை பார்த்துவிட்டு – அதாவது ஒரு பொம்மையாக இருந்துவிட்டு அரசியலுக்குள் வரவில்லை. பல நெருப்பாறுகளைக் கடந்தே தமிழ் மக்களின் அரசியலுக்குள் வந்தவன்” என்றும் தெரிவித்தார்.
மேலும், அரசியல் தலைமைகளின் தவறான தீர்மானங்களினால் சொல்லொணாத் துன்பங்களையும் கணக்கெடுக்க முடியாத இழப்புகளையும் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது கிடைத்திருக்கின்ற வாய்ப்புக்களை பயன்படுத்தி மக்களின் வாழ்வை கட்டியெழுப்ப தான் முயற்சிப்பதாகவும், யதார்த்தத்தினை புரிந்து கொண்டு மக்கள் சரியான தெரிவுகளை மேற்கொண்டு பயனடைந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி மற்றும் பூநகரி ஆகிய பிரதேச செயலகங்களிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் இன்று சௌபாக்கிய வாரம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அங்கஜன் இராமநாதன், அவரது இணைப்பாளர்கள் என கூறுபவர்களால் யாழ் மாவட்ட அரச நிர்வாகம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. அரச அதிகாரிகள் யாரும் சுயாதீனமாக செயற்பட முடியவில்லையென குமுறுகிறார்கள். யாழ் மாவட்ட செயலாளர், அங்கஜனின் அலுவலகத்தில் பணியாற்றுபவரை போல நடப்பதாக அரச உத்தியோகத்தர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். அண்மையில் முதலாம் தரத்தில் மாணவர்களை இணைக்கும் நிகழ்வில் மரம் நடுகைக்கு கூட தம்மை விருந்தினர்களாக அழைக்க வேண்டுமென பிரதேசங்களில் உள்ள அங்கஜனின் இணைப்பாளர்கள் என கூறும், யாரென்றே தெரியாதவர்கள் பாடசாலை அதிபர்களை மிரட்டியுள்ளனர். யாழ் மாவட்ட அரச நிர்வாகம் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் சீர்குலைந்து செல்லும் நிலையில், டக்ளஸ் தேவானந்தாவின் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.