28.9 C
Jaffna
June 26, 2022
இலங்கை

கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள் மீள வந்து இணைய வேண்டும்: முன்னாள் எம்.பி சந்திரகாந்தன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டுச் சென்றவர் அந்தக் கட்டமைப்புக்குள்ளே மீண்டும் வந்து இணைந்து ஒற்றுமைப் பட வேண்டும். போராட வேண்டும். அதனைவிடுத்து புதிய அமைப்பை, கட்சியை உருவாக்குவது ஒரு ஏமாற்று வேலைத்திட்டமாகவே இருக்கும் என்று அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.

ஜெனிவா விடயத்தில் செயற்படுவதற்காக அண்மையில் பல கட்சிகள் சேர்ந்து ஒரு அமைப்பாக உருவாகியிருந்தமை தொடர்பில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

பல கட்சிகளாக நாங்கள் பிரிந்து பிரிந்து போகப் போக பேரினவாத சக்திகளுக்கு, தென்னிலங்கை அரசாங்கத்திற்கு எங்களைப் பிரிப்பதற்கு இலகுவாகிப் போய்விடும். காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டபோது எங்களது பலம் சிறப்பாக இருந்தது. பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அப்போது 22 ஆக இருந்து இப்போதைய நிலை கழுதை தேய்ந்து கட்டெறும்பாகப் போனதாகத்தான் பார்க்க வேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் எம்மிடம் இருக்கும் கட்சி , அரசியல் கருத்து வேறுபாடுகளைத் தூக்கி எறிந்துவிட்டு மக்களுக்காகச் சிந்தித்து செயற்படவேண்டியது காலத்தின் அவசியம்.

பல கட்சிகளும் பல தீர்மானங்களை எடுப்பதனால் மக்களும் குழம்பி, எல்லோரும் குழம்பி, எதிர்கால சந்தததியினரும் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதில் முக்கியமானது என்னவென்றல் யுத்தங்கள், இறுதி யுத்தம் நடைபெறும்வேளையில் மௌனிகளாக இருந்துவிட்டு, எதிர்வரும் தேர்தல் காலங்களுக்காக தங்களைப் பிரபலப்படுத்தவதற்காக தேர்தல் களத்தில் குதிப்பதற்காக இவ்வாறான அமைப்புக்களை உருவாக்கி அதில் முன்பு ஒளித்துக் கொண்டிருந்தவர்களைக் கொண்டுவந்து தலைவராக்குவது ஒரு வீண் செயல்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டுப் போன தலைவர்கள், தமிழ்த் தேசியத்துக்காக பாடுபட்ட தலைவர்களைத் தேடிக் கண்டுபிடித்து ஒரு குடைக்குக் கீழ் வந்து ஒரு பயணம் நடத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கசப்புணர்வுகளைக் களைந்து அதகைப் பதிவு செய்து முன்னகர்த்தல் இப்போதைய தேவை.

தமிழ் மக்களின் எந்தவொரு விடயமாக இருந்தாலும், ஜெனிவா என்று சொன்னாலும் ஒரு குழுவே முடிவெடுக்க வேண்டும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் ஒரு முடிவாக இருந்து செயற்படுவோமாக இருந்தால், சுதந்திரக்கட்சியில் இருந்து தனிப்பெரும்பான்மையாக மொட்டுக் கட்சி உருவாகி இன்று 69 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அதற்கு அவர்களின் ஒற்றுமையே காரணம். நாம் ஒற்றுமையாக இருக்காத பட்சத்தில் எதுவும் சாத்தியமில்லை.

அது மட்டுமல்லாமல் இளைஞர்களையும் உள்வாங்கி அவர்களுக்கு தகுந்த பதவிகளைக் கொடுத்து எதிர்கால சந்ததிகளை உருவாக்க வேண்டும். வெறுமனே அறிக்கை விண்ணர்களாக இல்லாமல் செயல் வீரர்களை உருவாக்கவேண்டியது எமது கடமை.
எப்படி ஜனாசா விடயத்தில் முஸ்லிம் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாமையை அரசு தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியதோ, அதே போலதான் ஒற்றுமை இல்லாமல்தான் அனைத்து தமிழ்க் கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று ஒற்றுமைக்குள் வராத வரையில் தமிழ் மக்களுக்கு விமோசனம் இல்லை. பல அமைப்புகள், நிறுவனங்கள் தமிழ் மக்களுக்காக இருந்தாலும், ஒற்றுமை ஒரு முக்கியம் மிக்கதாகும்.ஏற்கனவே தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து வெளியே சென்றவர்களுக்கு அது கஸ்ரம்.

அவர்கள் அந்தக் கட்டமைப்புக்குள் வந்து செயற்பட்டாலே நன்மை பயக்கும். கட்சியில் இருந்து பிரிந்து கட்சி , கட்சிக்கு கட்சி, கட்சிக்காகக் கட்சி , கட்சியாகப் பிரிந்து என்று கட்சியைத் துறப்பதால் எந்தப் பிரயோசனமும் இல்லை. அந்த வகையில் புதிய கட்சிகள் தொடங்குவதால் பிரயோசனம் இல்லை. இதனை நான் ஒரு ஏமாற்று  வேலையாகவே பார்க்க வேண்டும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

செல்வம் எம்.பி இங்கொரு கதை, அங்கொரு கதை: கு.திலீபன் எம்.பி குற்றச்சாட்டு!

Pagetamil

யாழிலும் எரிபொருள் தட்டுப்பாடு!

Pagetamil

கொழும்பில் இன்று அரசாங்கத்திற்கு எதிரான பேரணி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!