பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்து கொண்டவர்களிற்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், இன்று நகர்த்தல் பத்திரம் மூலம் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நடைபயணத்தை தடுக்கும்படி பருத்தித்துறை நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்திற்குட்பட்ட பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை பொலிசார் பெப்ரவரி 5ஆம் திகதி நீதிவான் நீதிமன்றத்தில் உத்தரவொன்றை பெற்றிருந்தனர்.
நீதிமன்ற கட்டளைக்கு மாறாக நடந்து கொண்டார்கள் என கூறி, இதே பொலிசார் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் சிலருடைய பெயரை குறிப்பிட்டு, பி அறிக்கையென்ற பெயரில் அறிக்கை சமர்ப்பித்து, புலன் விசாரணை மேற்கொள்வதாக குறிப்பிட்டு, நீதிமன்ற அனுமதியை பெற்று, விசாரணைகளை மேற்கொள்வதாக சொல்கிறார்கள். எங்கள் பலரிடம் வாக்குமூலம் பெற்றுச்செல்கிறார்கள்.
இன்றைக்கு அந்த வழக்குகளை நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் மூலம் வரவழைத்து, இப்படியாக ஒரு வழக்கு நடடிக்கையை ஆரம்பிக்க சட்டத்தில் இடமில்லையென்ற சமர்ப்பனத்தை நீதிவான் முன் செய்துள்ளோம்.
பி அறிக்கை மூலம் தாக்கல் செய்த மனுக்களை இரத்து செய்ய வேண்டும், வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தக் கூடாது, ஏற்கனவே பெப்ரவரி 5ஆம் திகதி வழங்கப்பட்ட உத்தரவையும் இரத்து செய்யுமாறு கேட்டுள்ளோம்.
அரசியல் எதிர்ப்புக்களை வெளிக்கொண்டு வரும் நடவடிக்கைகள், கருத்து சுதந்திரம் என்பவை குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழ் மட்டுப்படுத்த ப்பட முடியாது என்கின்ற நீதிமன்ற தீர்ப்புக்கள் சகிதம் முன்வைத்து, அந்த உத்தரவையும் புறமொதுக்கி வைக்க வேண்டுமென கேட்டுள்ளோம்.
சம்பந்தப்பட்ட பொலிஸ் தரப்பினர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை. அவர்களின் தரப்பு வாதங்களையும் கேட்பதற்காக வரும் மார்ச் 22ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.