இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜெயவின் ஒரு ஓவரின் 6 பந்துகளையும் சிக்சர் அடித்து கலக்கியுள்ளார் மேற்கிந்திய தீவுகளின் அணித் தலைவர் கிரன் பொலார்ட். அவரது விளாசலுடன், இலங்கையை எளிதில் ஊதித்தள்ளியது மேற்கிந்தியத்தீவுகள் அணி.
இலங்கை- மேற்கிந்தியத் தீவுகள் அணிகளிற்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்த சாகசத்தை பொலர்ட் நிகழ்த்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்த சாதனையை புரிந்த 3வது வீரரானார் அவர்.
இந்த துரதிஷ்ட சாதனைக்கு முந்தைய ஓவரில், ஹட்ரிக் சாதனையை தனஞ்ஜென புரிந்துள்ளார். ஒரே போட்டியில் ஹட்ரிக் சாதனை புரிந்தவராகவும், ஒரு ஓவரில் 6 சிக்சர்களை விட்டுக்கொடுத்த எதிர்மறை சாதனையாளராகவும் தனஞ்ஜென இடம்பிடித்தார்.
கூலிட்ஜ் மைதானத்தில் இந்த போட்டி இடம்பெற்றது.
நாணயச்சுழற்சியில் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி, வழக்கத்தின் பிரகாரம் ஆடி 6 விக்கெட் இழந்து 131 ஓட்டங்களை பெற்றது. அறிமுக வீரர் பதும் நிஷங்க 39 ஓட்டம் (34 பந்து, 4 பௌண்டரி, 1 சிக்சர்), நிரோஷன் டிக்வெல்ல 33, வனிந்து ஹசரங்க 12 ஓட்டங்களை பெற்றனர்.
பந்து வீச்சில் ஒபெ மைகோய் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இலக்கை விரட்ட மேற்கிந்தியத் தீவுகள் களமிறங்கிய போது, முதல் ஓவரை அகில தனஞ்ஜெய வீசினார். மூன்றாவது ஓவரில் மீண்டும் பந்து வீச வந்த தனஞ்ஜெய, ஹட்ரிக் சாதனை புரிந்தார்.
எவின் லூயிஸ், கிறிஸ் கெயில், நிக்கலஸ் பூரான் ஆகியோரை வீழ்த்தினார். 2 ஆண்டுகளின் பின் பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய கெயில் முதல் பந்தியே வீழ்ந்தார்.
மீண்டும் 5வது ஓவரில் தனஞ்ஜென பந்து வீச வந்த போதே பெரும் விபரீதம் நிகழ்ந்தது. ஏதோவொரு விபரீத மூடில் இருந்த கிரன் பொலார்ட் 6 பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பினார்.
2007 உலகக் கோப்பையில் ஹெர்ஷல் கிப்ஸ்ம், பின்னர் 2007 டி 20 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் ஆகியோர் இதற்கு முன்னர், ஒரேஓவரில் 6 சிக்சர் அடித்துள்ளனர். இப்பொழுது கிரன் பொலார்ட் இந்த பட்டியலில் இணைந்தார்.
11 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 38 ஓட்டங்களை பெற்றார்.
ஜோசன் ஹோல்டர் 29, எவின் லூயிஸ் 28 ஓட்டங்களை பெற்றனர். 12.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களை பெற்று மேற்கிந்தியத்தீவுகள் வெற்றி பெற்றது. 41 பந்துகள் மீதமிருக்க இலகுவான வெற்றியை பெற்றது.
பந்து வீச்சில் இலங்கை சார்பில் ஹசரங்க டி சில்வா 12 ஓட்டங்களிற்கு 3 விக்கெட், அகில தனஞ்ஜெய 62 ஓட்டங்களிற்கு 3 விக்கெட் வீழ்த்தினர்.
அட்டநாயகன் கிரன் பொலார்ட்.