டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள முடக்க நிலையை எதிர்த்து நேற்று சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் எட்டு பேரை டென்மார்க் போலிசார் கைது
செய்துள்ளனர்.
மேன் இன் பிளாக் எனும் அமைப்பால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாகவும் அதில் ஏறத்தாழ 1,200 பேர் ஈடுபட்டதாகவும் டென்மார்க் பொலிஸார் கூறினர்.
கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளில் பலவற்றை நீட்டிப்பதாக டென்மார்க் அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.
இதையடுத்து, முடக்கநிலையை எதிர்த்து முதல்முறையாக அங்கு ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. ஆர்ப்பாட்டம் பெரும்பாலும் அமைதியான முறையில் நடத்தப்பட்டது. இதில், மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதற்காவும் சுடர்களைப் பயன்படுத்தியதற்காகவும் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
முதலில் 600 பேர் மட்டுமே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் ஆனால் மாலை நேரத்திற்குள் கோபன்ஹேகன் நகர மண்டபத்துக்கு முன்பாக 1,000க்கும் மேற்பட்டோர் கூடியதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.