ஜனாசா விடயம் உட்பட ஏனைய பிரச்சினை எழ காரணம் முஸ்லீம் தலைவர்கள். அவர்களை முஸ்லீம் அரசியல் தலைவர்கள் என்பதை விட முஸ்லீம் வியாபாரிகள் என்பதே பொருத்தமாக இருக்கும் என நாட்டை காக்கும் இளைஞர் அணியின் கிழக்கு மாகாண உப தலைவர் முஹமட் முஸ்தபா முஹமட் நிசாம் தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைமை தொடர்பாக அம்பாறை ஊடக அமையத்தில் சனிக்கிழமை(27) மாலை செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் கூறியதாவது-
அண்மைக்காலமாக ஜனாசா விடயத்தில் முஸ்லீம்கள் மனவேதனையுடன் இருந்த செய்தி யாவரும் அறிந்த விடயம். இதனை தொடர்ந்து கடந்த இரவு பிரதமர் மற்றும் ஜனாதிபதியினால் எட்டப்பட்ட முடிவுகளின் படி முஸ்லீம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளமை உண்மையில் இலங்கையில் வாழும் அனைத்து மனமகிழ்ச்சி அடையக்கூடிய ஒரு விடயமாகும். இந்த விடயத்தில் ஜனாதிபதி பிரதமருடன் தோள் நின்று உதவிசெய்த சக சிறுபான்மை கட்சியில் இருந்து முதன் முதலாக வாய் திறந்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் சாணக்கியன் ஆகியோருக்கு முஸ்லீம் கட்சி சார்பாகவும் அனைத்து கட்சி ஒன்றியம் நாட்டை பாதுகாக்கும் இளைஞர் ஒன்றியம் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
மேலும் இவ்விடயத்தில் நேராகவும் மறைமுகமாகவும் முதலில் செயற்பட்டு ஜனாதிபதி பிரதமருடன் இணைந்த நீதியமைச்சர் அலி சப்ரிக்கும் நன்றிகள். சுகாதார பிரிவு காலம் கடந்து எடுத்த முடிவாக இருந்தாலும் முஸ்லீம்களின் எதிர்வரும் நோன்பு மாதத்திற்கு முன்னர் இந்த முடிவு எட்டப்பட்டமையானது துறைசார் நிபுணர்கள் உட்பட ஜனாதிபதி பிரதமருக்கு நன்றிகளை கூற விரும்புகின்றேன்.
அத்துடன் முஸ்லீம் மக்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகின்றேன்.கடந்த காலங்களில் முஸ்லீம் மக்களின் நிலைமைகளை அவதானித்தால் அவர்கள் தேசிய கட்சிகளுடன் இணைந்து அரசியலை மேற்கொள்ள ஆயத்தம் செய்ய வேண்டும். எனது பார்வையில் முஸ்லீம் அரசியல் தலைவர்கள் என்பதை விட முஸ்லீம் வியாபாரிகள் என்பதே பொருத்தமாக இருக்கும் என கூறுகின்றேன். காரணம் என்னவெனின் தற்போது முஸ்லீம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் முஸ்லீம் தலைமைகள் சில எடுத்த முடிவுகளின் காரணமாகவே உருவானது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். அண்மைக்காலங்களில் முஸ்லீம் தலைமைத்துவங்கள் எடுத்த முடிவின் விளைவு தான் ஜனாசா உட்பட இன்னும் பல பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமையில் நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்பதை நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்ல விரும்புகின்றேன். இனியாவது முஸ்லீம் தலைமைகள் தகுந்த சிந்தனையுடன் முஸ்லீம் மக்களின் நலனுக்காக செயற்பட வேண்டும்.சுயநலமாக செயற்பட வேண்டாம்.
முஸ்லீம் தமிழ் மக்கள் ஜனாதிபதி பிரதமருடன் இணைந்து தேசிய அரசியலில் பயணிக்க வேண்டும். அரசியல் வாதிகளை தூக்கி எறியுங்கள். சிலரின் பீரங்கி பேச்சுக்கள் காரணமாக தான் இந்த ஜசானா விடயத்தில் காலதாமதம் ஏற்பட்டிருந்தது. இனியாவது மக்களை பற்றி சிந்திக்காவிடின் இந்த மண்ணில் இருந்து மக்கள் உங்களை ஓரங்கட்டுவார்கள் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன் என்றார்.
-பா.டிலான்-