எதிர்வரும் காலங்களில் பாரிய மலையக கொள்கை சார்ந்த ஜனநாயக அரசியலை முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவிக்கின்றார்.
தலவாக்கலையில் இன்று (28) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
2021ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ம் திகதியுடன் தொழிலாளர் தேசிய முன்னணி முடிவடைந்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து எம்.எஸ்.செல்லசாமி விலகிச் சென்ற சந்தர்ப்பத்தில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் மயில் சின்னத்திலேயே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சூழ்ச்சி காரணமாக, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மயில் சின்னம் இல்லாது செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த பின்னணயிலேயே, தொழிலாளர் தேசிய முன்னணி என்ற கட்சியை தான் யாப்பு எழுதி உருவாக்கியதாகவும் மயில்வாகனம் திலகராஜ் தெரிவிக்கின்றார்.
இவ்வாறான நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து வருகைத் தந்துள்ள ஒரு கூட்டம், தொழிலாளர் தேசிய முன்னணியை இல்லாதொழிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குற்றஞ்சுமத்துகின்றார்.
இதன் ஒரு கட்டமாகவே, தன்னை அந்த கட்சியிலிருந்து வெளியேற்றிவிட்டு, அந்த கட்சியை அவர்களின் தேவைக்கு ஏற்ப நடத்த முயற்சித்து வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
இதனாலேயே கட்சியை கலைக்கும் தீர்மானத்தை தான் எடுத்து, தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தான் விலகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனிவரும் காலங்களில் அவர்கள் வேறொரு அரசியல் கட்சியை உருவாக்கி செயற்படுவதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது என திலகராஜ் தெரிவிக்கின்றார்.
தொழிலாளர் தேசிய முன்னணியின் ஊடாக அடைய நினைத்த அரசியல் இலக்குகளை, எதிர்வரும் காலத்தில் பாரிய மலையக கொள்கை சார்ந்த ஜனநாயக அரசியலை கட்டியெழுப்புவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையிலேயே, தான் எதிர்காலத்தில் தனது அரசியல் பணியை முன்னெடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொழிலாளர் தேசிய முன்னணியில் அங்கம் வகிப்போரை தான் ஒருபோதும் தன்னுடன் இணையுமாறு அழைக்கவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.
தொழிலாளர் தேசிய முன்னணியிலிருந்து விலகுபவர்களுக்கு, அதே கட்சி சார்ந்தவர்களே பொறுப்பு என அவர் கூறுகின்றார்.
எனினும், தொழிலாளர் தேசிய முன்னணயிலிருந்து விலகி, தமது கொள்கைகளை ஏற்று தன்னுடன் இணைய விரும்புவோரை தான் அரவணைத்து செல்ல தயார் என அவர் தெரிவிக்கின்றார்.
இவ்வாறான நிலையில், தனது அரசியலை மலையகத்தில் முன்னெடுக்கும் விதம் குறித்து, விரைவில் அறிவிக்கவுள்ளதாக அவர் கூறுகின்றார்.
தன்னுடன் பேசி தீர்க்க வேண்டிய பல்வேறு விடயங்கள் காணப்பட்ட போதிலும், அதை பேசி தீர்த்துக்கொள்ளாமல், நயவஞ்சகமான முறையில் தன்னை கட்சியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தேசிய முன்னணியினால் முன்னெடுக்கப்பட்ட நயவஞ்சக செயற்பாடுகளை மக்களுக்கு வெளிப்படுத்தவுள்ளதாகவும் திலகராஜ் தெரிவிக்கின்றார்.
–க.கிஷாந்தன்–