நடிப்பு: சமுத்திரகனி, கருணாஸ், சுனுலட்சுமி, மரிமுத்து, ரம்யா
இயக்கம்: மணிமாறன்
இசை: சீனிவாசன் தேவாம்சம்
தயாரிப்பு: உதயா
விசைத்தறி தொழிற்கூடம் ஒன்றில் கருணாஸ், சுனுலட்சுமி பணிபுரிகிறார்கள். அங்கு பணிபுரியும் பெண் தொழிலாளர் ஒருவர் விபத்தில் சிக்கி, தனது ஒரு கையை இழக்க, அவருக்கு சரியான இழப்பீடு பெற்றுத்தரும் நடவடிக்கையில் கருணாஸ் ஈடுபடுகிறார். அவருக்கு சங்கம் உதவி செய்ய, அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் கதை.
தமிழ் சினிமாவில் இதுவரை கையாளப்படாத விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கையை கதைக்களமாக கொண்ட இப்படத்தின் கதை, தறியுடன் என்ற நாவலை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது.
முதலாளியின் நம்பிக்கைக்குரியவராக இருந்தாலும், சக தொழிலாளிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கருணாஸ் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், அந்த காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பும் அசத்தல்.
சங்கம், போராட்டம் என்றாலே பின்வாங்கும் சாமாணியனாக இருக்கும் கருணாஸ், தனது தலைமையில் சங்கம் செயல்பட வேண்டிய சூழல் உருவாகும் போது, நடிப்பில் வித்தியாசத்தை காட்டுபவர், தனது நடிப்பு மூலம் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளார்.
சங்கத்தலைவனாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி போராட்டக்காரர்களுக்கு உரிய கம்பீரத்தையும், தைரியத்தையும் நடிப்பில் அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
விஜே ரம்யா இதற்கு முன்பு பல படங்களில் முகம் காட்டியிருந்தாலும், இந்த படத்தில் நடிகையாக ரசிகர்கள் மனதில் தனது முகத்தை பதிய வைத்துள்ளார். அழுத்தமான கதாப்பாத்திரத்தில் ரொம்ப அசால்டாக நடித்திருக்கும் அவருடைய நடிப்பு மிகப்பெரிய ஆச்சர்யம்.
சுனுலட்சுமி, விசைத்தறி தொழிற்கூட முதலாளியாக நடித்திருக்கும் மாரிமுத்து என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமான தேர்வாக இருப்பதோடு, அளவான நடிப்பினால் கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.
சீனிவாசன் தேவம்சத்தின் ஒளிப்பதிவும், ராபர்ட் சற்குணத்தின் இசையும் கதைக்கு ஏற்ப உள்ளது. பாடல் வரிகள் அனைத்தும் சிந்திக்க வைக்கும் விதத்தில் உள்ளது.
தறியுடன் நாவல் ஆசிரியரான பாரதிநாதன் மற்றும் இயக்குநர் மணிமாறனின் வசனங்கள் சமூகத்தில் நடக்கும் அவலங்களை அம்பலப்படுத்துவதோடு, முதலாளிகளின் போலித்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
செய்த வேலைக்கு சரியான கூலியை பெறுவதற்கு கூட பலவிதமான போராட்டங்களை நடத்தும் தொழிலாளர்களின் அவலநிலையை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் மணிமாறன், தொழிற்சங்கங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் வரிசைப்படுத்தி படம் பார்ப்பவர்களுக்கு புரிய வைத்திருக்கிறார்.
சட்டப்படி நீதி கேட்க வேண்டும், என்று படம் முழுவதும் சொல்லி வரும் இயக்குநர், இறுதியில் நீதி கிடைக்கவில்லை என்றால், ஆயுதம் ஏந்துவது தான் சரி, என்று கூறியிருக்கிறார்.
எந்த இடத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல், அதே சமயம் சினிமா மொழியோடு விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வியலை நேர்த்தியாகவும், கச்சிதமாகவும் படமாக்கியிருக்கும் இயக்குநர் மணிமாறனை பாராட்டலாம்.