இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மோசமடைவது குறித்து கனடா கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமை குறித்து கனடா ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது என்று கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் நேற்று (24) உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீர்மானத்தை தாக்கல் செய்த இணை அனுசரணை நாடுகளில் ஒன்றான கனடா, இலங்கை தொடர்பான பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியது.
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கு அச்சுறுத்தல், நினைவுச்சின்னங்கள் அழித்தல், நினைவுகூரும் உரிமை தடுக்கப்படல், மத சிறுபான்மையினரின் கட்டாய தகனங்கள் பொன்றவை சட்ட ஆட்சியின் சீர்குலைவை பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார்.
மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் சமீபத்திய அறிக்கை இலங்கையில் நடந்த குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது என்று மார்க் கார்னியோ கூறினார்.
பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகளுக்கு கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று கார்னியோ கூறினார்.