சமூக ஊடகங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக வெளியாகும் விளம்பரங்களில் ஏமாற வேண்டாமென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரித்துள்ளது.
பேஸ்புக், வட்ஸ்அப், இமோ போன்ற சமூக ஊடகங்கள் வழியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட விளம்பரங்களினால் பலர் பாதிக்கப்பட்டதாக அண்மை நாட்களில் பல முறைப்பாடுகள் கிடைத்ததாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த மோசடியில் சில வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களும் தொடர்புபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகவர்கள் உரிமம் பெற்ற செய்தித்தாள்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி வழியாக மட்டுமே வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான முறையான விளம்பரங்களை வெளியிட அனுமதிக்கப்படுகிறார்கள். சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் அல்லது தகவல்களை இடுகையிடுவது சட்டவிரோதமானது மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும் என பணியகம் குறிப்பிட்டுள்ளது.