மன்னார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் கடமைபுரியும் சுகாதார ஊழியர்கள் இன்றைய தினம் புதன் கிழமை (24) காலை 9 மணி முதல் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இரண்டு நாள் சுகயீன விடுமுறை போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் கடமைபுரியும் சிறிலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் அங்கத்தவர்களான சுகாதார ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டமைக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும் முறையற்ற நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் கடமைபுரியும் சிறிலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் அங்கத்தவர்களான சுகாதார ஊழியர்களுக்கு கைவிரல் அடையாள இயந்திரம் மற்றும் தை மாத மேலதிக கொடுப்பனவு தொடர்பாக அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.
மேற்படி கைவிரல் அடையாள இயந்திர பாவனை சம்பந்தமாக வட மாகாண பிரதம செயலாளர் , சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரால் முன்னர் அனுப்பி வைக்கப்பட்ட சுற்று நிருபங்களின் பிரகாரம் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் கடமையாற்றும் வைத்தியர்கள் தவிர்ந்த அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கைவிரல் அச்சு இயந்திரம் பாவிக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது அதனை மாற்றி வைத்தியர்கள் , தாதியர்கள் துணை மருத்துவ சேவையாளர்கள் தவிர்ந்த அனைவரும் கைவிரல் அச்சு இயந்திரம் பயன்படுத்த வேண்டும் என்றும் அவ்வாறு பயன்படுத்தினால் தான் அனைத்து கொடுப்பனவுகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடானது சுகாதாரத்துறையில் எம்மை ஓர வஞ்சனையான பார்வையில் பார்ப்பதாக நாங்கள் உணர்கின்றோம்.
இவ்விடையம் தொடர்பில் பல்வேறு பேச்சுவார்த்தையினை மேற்கொண்டும் உரிய தீர்வு கிடைக்கவில்லை. இந்த நிலையிலே தாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தது வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இன்று புதன் கிழமை காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் ஒன்று கூடிய சுகாதார ஊழியர்கள் கருப்பு பட்டி அணிந்து பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.குறித்த சுகயீன விடுமுறை போராட்டம் நாளை வியாழக்கிழமையும் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.