சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுமார் 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவசர சிகிச்சை விடுதி உள்ளிட்ட இரண்டு விடுதிகள் மூடப்பட்டுள்ளன.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டியொருவர் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவர் சிகிச்சை பெற்ற அவசர சிகிச்சை பிரிவு, பெண்கள் விடுதி என்பன மூடப்பட்டுள்ளன.
அவர் சிகிச்சை பெற்ற விடுதியில் கடமையாற்றிய 4 வைத்தியர்கள், 7 தாதியர்கள் உள்ளிட்ட 14 பேர் வரையானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வதந்தி காரணமாக இன்று சாவகச்சேரியில் 2 பாடசாலைகள் இயங்கவில்லை. வீரசிங்கம் மகாவித்தியாலயம், திருநாவுக்கரசு வித்தியாலயம் இரண்டிற்கும் இன்று மாணவர்கள் செல்லவில்லை.
தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட மூதாட்டியின் குடும்ப உறுப்பினர்கள் இருவர் இந்த இரண்டு பாடசாலையிலும் கல்வி கற்பித்தனர். இதையடுத்து, பாடசாலையை சுகாதாரத்துறையினர் முடக்கியுள்ளதாக பரவிய வதந்தியையடுத்து, அந்த இரண்டு பாடசாலைகளுக்கும் மாணவர்கள் சமூகமளிக்கவில்லை.