மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அவரது ஆளுயர உருவ மெழுகுச்சிலை திறந்து வைக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (24) அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு முன்னர் திறக்கப்பட்ட நினைவிடம் அவரது பிறந்தநாள் அன்று பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு பெரிய அளவில் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக மீண்டும் மூடப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டது. இன்று காலை முதல்வர், துணை முதல்வர் கட்சி நிர்வாகிகள் புடைசூழ ஜெயலலிதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன்பின்னர் 73 கிலோ எடை உடைய கேக் வெட்டப்பட்டது. பின்னர் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள சட்ட பேரவை தேர்தலுக்கு அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இருவரும் தொடங்கி வைத்தனர்.
பின்னர் சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள ஜெயலலிதா உயர் கல்வி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்க விழா, தேசிய பெண் குழந்தை தின விருது மற்றும் மாநில பெண் குழந்தை பாதுகாப்பு தின விருதுகள் வழங்கும் விழாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இணைந்து திறந்து வைத்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் ஆளுயர மெழுகு சிலையை அனைவரும் வணங்கினர். இந்த அருங்காட்சியகத்தில் ஜெயலலிதா சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் சேகரித்து பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அறிவுசார் பூங்காவும் திறக்கப்பட்டது. இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக தொண்டர்கள் அவர்களது இல்லங்களில் விளக்கேற்றி உறுதி மொழி எடுத்துக் கொள்கின்றனர்.