ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று 22ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இம்முறை காணொளி ஊடாகவே இந்தக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடர்பில் உலக நாடுகளின் மனித உரிமை நிலை குறித்து கலந்துரையாடப்படவுள்ளதுடன் இலங்கை குறித்து விவாதமும் நடைபெறவுள்ள நிலையில் புதிய பிரேரணை ஒன்றும் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதேவேளை, 23 ஆம் திகதி மாலை வேளையில் அல்லது 24ஆம் திகதி காலையில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உரையாற்றவிருக்கின்றார். அமைச்சர் தினேஷ் குணவர்தன கொழும்பில் இருந்தவாறு இணைய வழியில் ஜெனிவா சபையில் உரையாற்றவுள்ளார்.
முதல் மூன்று நாட்கள் பிரதான ஆரம்ப அமர்வுகள் இடம்பெறவுள்ளன. 22ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஆரம்ப அமர்வுகளில் பல நாடுகள் உரையாற்றவுள்ளன. நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் ஆரம்ப அமர்வில் உரையாற்றவுள்ளனர். முக்கியமாக அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் ஆரம்ப அமர்வில் உரையாற்றுவதற்கு ஏற்பாடாகியுள்ளது.
மேலும், 22 ஆம் திகதி நடைபெறும் அமர்வில் சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் லீ உரையாற்றவுள்ளதுடன் 23ஆம் திகதி அமர்வில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உரை நிகழ்த்தவிருக்கிறார். இதன்போது இலங்கை விவகாரம் குறித்து பிரஸ்தாபிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்காவின் சார்பில் அந்நாட்டின் புதிய இராஜாங்க செயலர் அன்டி ஜே, பிலிங்கன் மற்றும் பிரிட்டன் சார்பில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப் ஆகியோர் உரையாற்ற ஏற்பாடாகியுள்ளது.
முதல்நாள் அமர்வில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஆகியோர் உரையாற்றவுள்ளனர். மனித உரிமைகள் ஆணையாளரின் முதல் உரையின்போதும் இலங்கை குறித்து பிரஸ்தாபிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் தரப்பில் உரையாற்றும்போது தாம் இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக இதன்போது பிரஸ்தாபிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோன்று இந்தியாவின் சார்பில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் இந்தச் சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதும் இலங்கை தொடர்பான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், இலங்கை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உரையாற்றும்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை நிராகரிப்பார் என்றும், அது தவறான தகவல்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே இலங்கை அரசானது அந்த அறிக்கையை நிராகரித்து 18 பக்க அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு அனுப்பி வைத்திருக்கின்றது.
இது இவ்வாறு இருக்க இம்முறை 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக மற்றுமொரு புதிய பிரேரணை பிரிட்டன், கனடா, ஜேர்மனி உள்ளிட்ட 5 நாடுகளினால் கொண்டுவரப்படவுள்ளது. தற்போது அந்த அறிக்கையின் உள்ளடக்கங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வரைவில் தமிழர் தரப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சர்வதேச நீதிமன்றம் தொடர்பான விடயங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி. மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி.ஆகியோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக வாக்கெடுப்பை இலங்கை கோரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. வாக்கெடுப்பைக் கோரும் பட்சத்தில் சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கையை ஆதரிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக சீனா இலங்கையிடம் உறுதியளித்திருக்கின்றது. அந்தவகையில் இம்முறை ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரானது இலங்கைக்கு முக்கியத்துவம் மிக்கதாக அமைந்திருக்கின்றது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்டு இலங்கையால் இணை அனுசரணை வழங்கப்பட்ட 30/1 என்ற பிரேரணை பின்னர் 2017ஆம் ஆண்டில் 34/1 என்றும், பின்னர் 2019 ஆம் ஆண்டில் 40/1 என்றும் நீடிக்கப்பட்டது. அந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன்னைய நல்லாட்சி அரசு அனுசரணை வழங்கியது. ஆனால், 2019இல் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு 2020 ஆம் ஆண்டு அனுசரணையை மீளப்பெற்றது. அந்தவகையிலேயே இம்முறை புதிய பிரேரணை கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பிரேரணையில் இலங்கைக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும் பட்சத்தில் அது வெற்றியடைவது சாத்தியமில்லையென இணை அனுசரணை வழங்கும் நாடுகள் கருதுகின்றன.
இலங்கை தொடர்பான பிரேரணை மென்மையாக்கப்பட்டது இதனால்தான் என்றும், இந்த பிரேரணையையும் தோற்கடிக்கலாமென இலங்கை தரப்பில் நம்பிக்கையுடனிருப்பதாகவும் அறிய வருகிறது.