இந்தியாவிடமிருந்து திருகோணமலை எண்ணெய் குதங்களை இலங்கை மீளப்பெறுமென தான் தெரிவிக்கவேயில்லையென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், எண்ணெய்க் குதங்களை இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் என்பன கூட்டாக உருவாக்கி பராமரிக்கும் என்றார்.
எண்ணெய்க்குதங்களை பற்றி அவர் தெரிவித்தவற்றை ஊடகம் ஒன்று தவறாக மொழிபெயர்த்து எண்ணெய்க்குதங்களை மீளப்பெறுவதாக கூறியதாக செய்தியாக்கியதாக தெரிவித்தார்.
எண்ணெய்க்குதங்களில் பெரும்பகுதி பங்குகளை இந்தியா தொடர்ந்து வைத்திருக்கும் என்று அமைச்சர் கம்மன்பில கூறினார்.
இது தொடர்பாக இந்திய உயர் ஸ்தானிகராலயத்துடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகக் கூறிய அவர், எரிசக்தி அமைச்சராக கடமைகளை ஏற்றுக்கொண்டபோது பேச்சுவார்த்தைகள் தொடங்கியதாகவும், அது தனது எல்லைக்குட்பட்டது என்றும் கூறினார்.
இந்த விவகாரம் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். இது முன்னாள் அரசாங்கங்கள் கையெழுத்திட்டது. அனைத்து 99 தொட்டிகளும் இந்தியாவுக்கு குத்தகைக்கு விடப்பட்டன.
எதிர்கால தேவை கருதி எண்ணெய்க்குதங்களை அபிவிருத்தி செய்வதற்கான கொள்கை முடிவு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.