உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களிற்கு அரசியல் தீர்வை வழங்க வேண்டும். அல்லது, தமிழ் மக்கள் வெளியக சுயநிர்யணய உரிமையின் அடிப்படையில் தனியாக பிரிந்து செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும்.
இவ்வாறு புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர்குழுவின் முன்னிலையில் அழுத்தம் திருத்தமாக- வெட்டு ஒன்று துண்டு இரண்டாக- தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்தது.
புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர்குழுவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களிற்குமிடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.
காலை 10.30 மணிக்கு ஆரம்பித்த சந்திப்பு நண்பகல் 12.30 வரை நீடித்தது.
அரசியலமைப்பிற்கான நிபுணர்குழு உறுப்பினர்கள் முழுமையாக அமர்வில் கலந்து கொண்டிருந்தனர். கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட செல்வம் அடைக்கலநாதன், தனக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக இரா.சம்பந்தனிடம் தகவல் தெரிவித்து, சந்திப்பில் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டார்.
தமிழ் மக்களின் வரலாறு, அரசியல் உரித்துக்கள், உரிமைக்கான போராட்ட வரலாறு ஆகியவற்றை அழுத்தம் திருத்தமாக இரா.சம்பந்தன் தெரிவித்தார். அண்மைக்காலமாக உடல்நலம் குன்றி, தளர்ந்திருந்த இரா.சம்பந்தனின் நீண்ட விளக்கம் நிபுணர்குழுவையும் ஆச்சரியப்படுத்தியிருந்தது.
விலாவாரியாக அனைத்தையும் தெரிவித்த இரா.சம்பந்தன், உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களிற்கு அரசியல் தீர்வை வழங்க வேண்டும். அல்லது, தமிழ் மக்கள் வெளியக சுயநிர்யணய உரிமையின் அடிப்படையில் தனியாக பிரிந்து செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும் என முத்தாய்ப்பாக முடித்தார்.
வெளியாக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரிந்து செல்வது என்பதன் அர்த்தம், தனிநாடா என நிபுணர்குழு வினவியது.
ஆம் என சம்பந்தன் பதிலளித்தார்.
அதனை எப்படி பெறுவீர்கள், ஆயுதவழியிலா அல்லது பிற வழிகளிலா என நிபுணர்குழு வினவியது.
“எமது உரிமைகளை அகிம்சை முறையில் ஜனநாயக முறையில் பெற்றெடுப்போம். உலகில் பல நாடுகள் தற்போதும் உதயமாகி வருகின்றன. சர்வசன வாக்கெடுப்பு போன்ற பல வழிமுறைகள் அதற்காக உள்ளன“ என குறிப்பிட்டு, அண்மைக்காலத்தில் சர்வசன வாக்கெடுப்பு நடந்த நாடுகள், பிராந்தியங்களை உதாரணமாக குறிப்பிட்டு பேசினார்.