Pagetamil
முக்கியச் செய்திகள்

பௌத்தத்தை முன்னிலைப்படுத்திய இலங்கையில் இந்துக்களை முன்னிலைப்படுத்திய கட்சி உருவாவதில் என்ன தவறு?: விக்னேஸ்வரன்!

மனித உரிமைகள் அடிப்படையில் யாவரையும் சமமாக நடத்தி வரும் ஒரு நாடு நிறுவனமயப்படுத்தப்பட்ட சமயமொன்றினை முதன்மைப்படுத்த வேண்டியதில்லை. இன்று மதமானது அகந்தையின் உறைவிடமாக மாறியுள்ளது. சாம்ராட் அசோகன் கொன்று குவித்துவிட்டு பௌத்தனாக மாறினான். அண்மைக்காலங்களில் பௌத்தத்தின் பெயரைச் சொல்லியே கொலைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள் சிலர். பௌத்தர் அல்லாதோரைக் கொல்வது பாவமில்லை என்பது அவர்கள் கருத்தாக இருக்கக் கூடும். அவ்வாறு நினைப்பது கூட காட்டு மிராண்டி காலத்துக் கருத்தாகும். புத்தபிரான் அவ்வாறு கூறவில்லை. அவர் காலத்தில் பௌத்தர்கள் என்று எவரும் இருக்கவுமில்லை என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன்.

இன்று (20) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது அறிக்கையில்,

உண்மையில் திரிபுரா மாநில முதலமைச்சர் உண்மையாக என்ன சொன்னார் என்பதை நாம் முதலில் அறிய வேண்டும். கொள்கை ரீதியாக பா.ஜ.க கொள்கைகளுக்கு ஆதரவான கட்சி இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறினாரோ தெரியாது. ஆனால் கம்யூனிச கொள்கைகளைக் கொண்ட நாடுகள் சார்ந்த கட்சிகள் இங்கிருந்து வருகின்றன.

சண்முகதாசனின் கம்யூனிஸக் கட்சி பீகீங் உடன் தொடர்பு வைத்திருந்தது. பீற்றர் கெனமனின் கம்யூனிஸக் கட்சி மொஸ்கோவுடன் தொடர்பு வைத்திருந்தது. ஜே.ஆர் “யங்கி டிக்” என்றே அழைத்தார்கள். அவரின் கொள்கைகள் அமெரிக்க அரசுக் கொள்கைகளையே பிரதிபலித்தன. பாகிஸ்தானுடனும் மத்திய கிழக்கு முஸ்லீம் நாடுகளுடனும் தொடர்பு வைத்திருக்கும் இஸ்லாமியக் கட்சிகள் இங்கு இருக்கின்றன. எனவே மோடியின் கொள்கைகளைப் பிரதிபலிக்கும் கட்சி ஒன்றைப் பற்றியே திரிபுரா முதலமைச்சர் கூறினாரோ நான் அறியேன். ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை ஆதரிக்கும் ஒரு கட்சியை திரு மறவன்புலோ சச்சிதானந்தன் அவர்கள் இங்கு நடத்தி வருகின்றார் என்று நம்புகின்றேன்.

பா.ஜ.க இந்துத்வ கருத்துக்களைக் கொண்டது. இந்து மக்களின் வாழ்க்கை முறை, மதம், கலாசாரம் ஆகியன அழிந்து, சிதைந்து, சின்னா பின்னமாகப் போகக் கூடாது என்று எண்ணுபவர்கள் அவர்கள். இந்துக்களாகச் சிந்திப்பவர்கள், செயல்படுபவர்கள். ஆனால் இந்து சமூகத்தில் இருக்கும் பல்வேறு வேறுபாடுகளுக்குத் தீர்வு கண்டு வருபவர்கள்.

சிங்கள பௌத்தம் என்ற கோஷத்தை ஜனாதிபதி கோதாபய எழுப்பியதால்த் தான் இந்துத் தமிழர்கள் என்ற சிந்தனை எங்களுள் சிலர் மத்தியில் எழுந்துள்ளதோ நான் அறியேன். மனித உரிமைகள் அடிப்படையில் யாவரையும் சமமாக நடத்தி வரும் ஒரு நாடு நிறுவனமயப்படுத்தப்பட்ட சமயமொன்றினை முதன்மைப்படுத்த வேண்டியதில்லை. இன்று மதமானது அகந்தையின் உறைவிடமாக மாறியுள்ளது. சாம்ராட் அசோகன் கொன்று குவித்துவிட்டு பௌத்தனாக மாறினான். அண்மைக்காலங்களில் பௌத்தத்தின் பெயரைச் சொல்லியே கொலைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள் சிலர். பௌத்தர் அல்லாதோரைக் கொல்வது பாவமில்லை என்பது அவர்கள் கருத்தாக இருக்கக் கூடும். அவ்வாறு நினைப்பது கூட காட்டு மிராண்டி காலத்துக் கருத்தாகும். புத்தபிரான் அவ்வாறு கூறவில்லை. அவர் காலத்தில் பௌத்தர்கள் என்று எவரும் இருக்கவுமில்லை.

இலங்கையின் ஆதிக் குடிகளான சைவர்கள் தமக்கென வடகிழக்கைக் கேட்கவில்லை. இங்கு வசிக்கும் தமிழ் இந்துக்கள், கிறீஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் சிங்களவர் அனைவரும் சேர்ந்து சுயநிர்ணய உரிமையைப் பெற வேண்டும் என்பதே அவர்கள் கோரிக்கை. வடக்குக் கிழக்கில் தமிழ் பேசுவோரிடையில் மத வேற்றுமை இப்பொழுது குறைந்து வருகின்றது.  தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் இந்து – கிறிஸ்தவம் என்ற பாகுபாடு ஒருபோதும் இருந்ததில்லை. இனியும் இருக்காது. கிறிஸ்தவ பாதிரிமார்கள் எமது மக்களின் மனித உரிமைகளுக்காக அளப்பரும் பங்களிப்பையும் தியாகங்களையும் செய்திருக்கின்றார்கள். இன்றுவரை தமிழ் மக்களின் அரசியல் தலைவராக தந்தை செல்வாவே போற்றப்படுகின்றார். அண்மைய எழுச்சிப் பேரணி இந்து – கிறீஸ்தவ – இஸ்லாமியரிடம் இருந்த முரண்பாடுகளைக் குறைக்க வழி அமைத்துள்ளது.

குடிமக்கள் எவரும் இந் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக கட்சி ஒன்றை உருவாக்குவதற்கு சட்டத்தில் முரண்பாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
சரத் வீரசேகர அவர்கள் என்னை இலக்காக வைத்துத் தாக்கி வருகின்றார். ஒருவேளை என் பெயரைக் கூறி அவர் தமக்குப் பெயரெடுக்கப் பார்க்கின்றாரோ தெரியவில்லை. என்னை திரிபுரா முதலமைச்சருடன் சேர்த்துப் பேச அவர் பிரயோகிக்கும் ஆயுதம் நான் முதலமைச்சராக இருந்த போது “வடக்கில் சிங்கள மக்கள் வாழ்க்கை நடத்த உரிமை இல்லை” என்று நான் கூறியதாகக் கூறும் அவரின் கூற்று. அவ்வாறு நான் கூறிய சந்தர்ப்பத்தை அவர் வெளியிட வேண்டும். நான் அவ்வாறு கூறவில்லை, கூறியிருக்கவும் முடியாது. நான் கொழும்பில்; பிறந்து பல வருடகாலம் தெற்கில் வாழ்ந்தவன். திடீரென்று நான் இங்கு வந்து சிங்கள மக்கள் இங்கு வாழ்க்கை நடத்த உரிமை அற்றவர்கள் என்று கூற நான் படையணிப் பணியாளர் ஒருவர் அல்ல. சட்டத்தரணி, சட்ட விரிவுரையாளர், நீதிபதி, நீதியரசர் என்ற பல பரிமாணங்களைக் கொண்ட ஒருவர் இவ்வாறு கூறியிருக்கக் கூடுமா என்று வீரசேகர முதலில் சிந்தித்திருக்க வேண்டும், ஆராய்ந்திருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாமல் அபாண்டமாகப் பழி சுமத்துவது ஒரு அமைச்சருக்கு அழகல்ல.
ஆனால் சட்ட அனுமதி இல்லாமல் புத்த பிக்குகள் வெளியில் இருந்து வந்து புத்த சிலைகளை வடமாகாணத்தில் நிறுவுவதை நான் கண்டித்துள்ளேன். அவர்களுக்கு அவ்வாறு வந்து படையணியருடன் சேர்ந்து பலாத்காரமாக சிலை அமைக்க முடியாது என்று கூறியுள்ளேன். படைப் பணியினர் போருக்குப் பின்னர் தொடர்ந்து வடக்கு கிழக்கில் இருந்து வருவதைக் கண்டித்துள்ளேன். அமைச்சர் எந்தளவுக்கு என் கூற்றுக்களைப் புரிந்து கொண்டுள்ளார் என்பதில் எனக்கு சந்தேகம் ஏற்படுகின்றது. எது எவ்வாறெனினும் அரசியல் செய்வதாயின் பொய்யை ஆயுதமாகப் பாவித்து அரசியல் இலாபம் பெற முயற்சிக்கலாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அனுரவின் சீனப்பயணம்: 10 பில்லியன் டொலர் மதிப்பு முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு!

Pagetamil

மின் கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு!

east tamil

UPDATE: மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு!

Pagetamil

மன்னார் நீதிமன்ற வாயிலில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் காயம்: உயிலங்குளம் இரட்டைக்கொலைக்கு பழிக்குப்பழியா?

Pagetamil

இஸ்ரேல் -ஹமாஸ் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது: ஆறு வார காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விவரங்கள்!

Pagetamil

Leave a Comment