பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பாக பொலிசாரிடம் வாக்குமூலமளிக்க எம்.கே.சிவாஜிலிங்கம் மறுத்துள்ளார்.
இன்று காலை 9.30 மணியளவில் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இல்லத்திற்கு சென்ற வல்வெட்டித்துறை பொலிசார், சிங்கள மொழியிலான ஆவணமொன்றை கையளிக்க முயன்றனர்.
பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில், நாளை காலை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலமளிக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், சிங்கள மொழியலான ஆவணத்தை பெறமாட்டேன் என சிவாஜிலிங்கம் மறுப்பு தெரிவித்து விட்டார்.
இதையடுத்து, ஆவணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை பொலிசார் தெரிவித்தனர்.
எனினும், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாக எம்.கே.சிவாஜிலிங்கம் மறுப்பு தெரிவித்து விட்டார். தான் ஏதாவது தவறு செய்திருந்தால், அது தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்யும்படியும், நீதிமன்றத்தில் தனது தரப்பு நியாயத்தை தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
பின்னர், பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்காக வாக்குமூலம் பெறப்போவதாக பொலிசார் தெரிவித்த போது, அதையும் சிவாஜிலிங்கம் நிராகரித்தார்.
ஏதாவது தவறிழைத்திருந்தால் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும்படியும், நீதிமன்றத்தில் தனது தரப்பு நியாயத்தை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.