நாசாவின் ‘பெர்சவரன்ஸ்’ விண்கல ஆய்வில் முக்கிய பங்காற்றிய இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானி சுவாதி மோகனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ளது. இந்த விண்கலமானது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்பி எடுத்துவரவும் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் திகதி நாசா விஞ்ஞானிகள், ‘பெர்சவரன்ஸ்’ விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பினர். இந்த விண்கலம் மேற்கொள்ளும் ஆய்வின் மூலம் செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது குறித்து புதிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆய்வில் இந்தியாவில் பிறந்த நாசா விஞ்ஞானி டாக்டர் சுவாதி மோகனுக்கு மிகப் பெரிய பங்கிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், நாசாவின் ‘பெர்சவரன்ஸ்’ விண்கல ஆய்வில் பங்காற்றிய விஞ்ஞானி ஸ்வாதி மோகனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
நாசாவின் ‘பெர்சவரன்ஸ்’ ரோவரின் வழிநடத்தும் குழுவின் தலைவர் ஸ்வாதி மோகனுக்கு வாழ்த்துகள். இந்தியாவுக்கும் உலகுக்கும் பெருமை மிகு தருணம்!
நாசா ஜே.பி.எல் மற்றும் அதன் அறிவியலாளர்கள் அறிவியலின் புதிய எல்லைகளைக் கடந்து, நமது அறிவின் பரப்பை விரிவாக்கம் செய்வதைக் கண்டு வியப்படைகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.