ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் சூரிய சக்திக்கான கடன் திட்டத்தை, மின்சாரசபையின் யாழ்ப்பாண சிங்கள அதிகாரி நடைமுறைப்படுத்தாமல் பணத்தை தெற்கிற்கு அனுப்ப முயற்சிக்கிறார் என்ற பகீர் தகவலை வெளியிட்டுள்ளார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
இன்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி 1000 கோடி ரூபா நிதி வழங்கியிருந்தது. இது அந்தந்த பிரதேசத்திலுள்ள மக்கள் மின்சாரசபை ஊடாக 4 வீதத்தில் கடன் பெற்று திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஏற்பாடு.
ஆனால் யாழ்ப்பாணத்திலுள்ள மின்சாரசபையின் பிரதி பிராந்திய முகாமையாளர்- அவர் ஒரு சிங்களவர்- திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்களிற்கு அதை வழங்கவில்லை. காசு முடிந்து விட்டது, திட்டம் முடிந்து விட்டது என்ற பதில்தான் வழங்கப்படுகிறது.
ஆனால் உண்மையாகவே பெருமளவு பணம் வங்கியில் உள்ளது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் தமிழ் மக்களிற்கு அதை வழங்க அவர்கள் விரும்பவில்லை. இந்த பணம் தென்பகுதிக்கு அனுப்பப்படவுள்ளது. அதனால்தான் விண்ணப்பிக்கும் தமிழ் மக்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
ஆசிய அபிவிருத்தி வங்கி தந்த பணம் முடிந்து விட்டது, இனிமேல் சூரியசக்தி மின் திட்டத்திற்கு யாருக்கும் பணம் வழங்கப்படாது என்பதை வடக்கிற்கு பொறுப்பான அதிகாரி பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றார்.