டெல்லியில் எல்லையில் விவசாயிகள் போராட்டத்துக்கான டூல்கிட் பகிர்ந்தது தொடர்பாக நடத்தப்பட்ட ஜூம் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் யார் யார் என தகவல் தருமாறுஅந்த நிறுவனத்துக்கு மும்பை போலீஸார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி தலைநகர் டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் குடியரசு தின நிகழ்ச்சியின்போது டெல்லியில் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடிக்க, காலிஸ்தான் ஆதரவாளர்களால்தான் இந்த வன்முறை நிகழ்த்தப்பட்டதாக டெல்லி போலீஸார் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக, ட்விட்டரில் உலவிய டூல்கிட்டை இதற்கு ஆதாரமாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் என்ன மாதிரியான ஹேஷ்டேக் உருவாக்க வேண்டும், எப்படிப்பட்ட கேள்விகளை கேட்க வேண்டும், போராடும் விவசாயிகளுக்கு ஏன் ஆதரவு அளிக்க வேண்டும்? என நீண்ட விவரங்கள் அடங்கியதுதான் டூல்கிட் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த டூல்கிட்டை பகிர்ந்துதான் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் ட்விட்டரில் கருத்து தெரிவித்தார். இந்த டூல்கிட்டை பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுச் சூழல் ஆர்வலர் திஷா ரவி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததால், அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், டெல்லி போலீஸார் நேற்று முன்தினம், மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் நிகிதாஜேக்கப் மற்றும் அவரது உதவியாளர் சாந்தனுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிஆணையை பிறப்பித்துள்ளனர். கூகுள் டூல்கிட்டை உருவாக்கிய வர்கள் என்பதே இவர்கள் மீது போலீஸார் வைத்துள்ள குற்றச்சாட்டு ஆகும்.
இதனிடையே ஜேக்கப், சாந்தனு ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். இருவரும் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்காக பணியாற்றி வருகின்றனர்.
இதுகுறித்து மும்பை சைபர் பிரிவைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “திஷா ரவிக்கு கிரெட்டா தன்பர்க்குடன் தொடர்பு இருந்தது. ஆகையால் திஷாவை இந்த டூல்கிட் விவகாரத்தில் இணையும்படி நிகிதாவும், சாந்தானுவும் கேட்டுக் கொண்டனர்” என்றார்.
இதனிடையே நிகிதா மற்றும் சாந்தனு ஆகியோர் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள அவர்களது வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் டூல்கிட் தொடர்பாக ஜூம் செல்போன் செயலியில் கூட்டம் நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஜனவரி 11-ம் தேதி நடந்த டூல்கிட்கூட்டம் தொடர்பான விவரங்களைத் தருமாறு ஜூம் நிறுவனத்தை போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக ஜூம் நிறுவனத்தார் தெரிவித்துள்ளனர்.
2 தீவிரவாதிகளுடன் ஒப்பீடு
இதுகுறித்து கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய மக்களவை தொகுதி பாஜக உறுப்பினர் பி.சி.மோகன், தனது ட்விட்டர் பக்கத்தில், “புர்ஹான் வானி வயது 21. அஜ்மல் கசாப் வயதும் 21. வயது என்பது ஒரு எண்தான். யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்ல. சட்டம்தன் கடமையைச் செய்யும். குற்றம் குற்றம்தான், குற்றம்தான், குற்றம்தான். #திஷா ரவி” என பதிவிட்டுள்ளார்.
காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது நடந்த பல்வேறு தாக்குதலில் தொடர்புடைய புர்ஹான் வானி, கடந்த 2016-ம்ஆண்டு ஜூலை மாதம் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டார். 2008-ல் நிகழ்ந்த மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாபுக்கு 2012-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தீவிரவாதிகளான இவர்கள் 21 வயதில்தான் குற்றச்செயல் புரிந்தனர். எனவேதான் இவர் களுடன் திஷா ரவியை ஒப்பிட் டுள்ளார் பாஜக எம்.பி.