பதுளை பெற்றோர் நிரப்பு நிலையத்தின் முன்பாக இடம்பெற்ற விபத்தில் 6 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தரம் 1 மாணவர்கள் பாடசாலைகளில் இன்று இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள். தனது வாழ்க்கையில் முதன்முறையாக இன்று பாடசாலைக்கு அடியெடுத்து வைக்கும் கனவுடன் சென்ற மாணவனொருவனே பரிதாபகரமாக உயிரிழந்தார்.
இன்று (15) காலை 7.20 மணியளவில் பதுளை பெட்ரோல் நிலையம் முன் பாரவூர்தி மோதி மாணவன் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்யாலயாவின் முதல் வகுப்பு மாணவரான, அசெலபுரவில் வசிப்பவரான சிவனேசன் வருண் (6) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இரட்டையர்களான இரண்டு மாணவர்கள் இன்று முதல்நாள் பாடசாலையில் இணைக்கப்படவிருந்தனர். அவர்களை பாட்டி பாடசாலைக்கு அழைத்து சென்றார். இதன்போது இந்த விபத்து நேர்ந்தது. விபத்தில் பாட்டியும் பலத்த காயமடைந்தார். இரட்டையரான மற்ற மாணவன் அதிரஷ்டவசமாக காயங்களின்றி தப்பித்தார்.
பாட்டி பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாரவூர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.