மியான்மரில் இராணுவ சதிப்புரட்சி ஆட்சியாளர்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்டுள்ள மக்கள் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது. பொதுமக்களின் எதிர்ப்பு போராட்டம் வலுக்க, நாட்டை நிர்வகிக்கும் ஆட்சியாளர்களின் திறன் முடங்கி வருகிறது.
ஆட்சிக் கவிழ்ப்பிற்கு எதிராக இன்று ஒன்பதாவது நாளாகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கினர்.
ஆங் சான் சூகி தலைமையிலான சிவில் அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்த பிப்ரவரி 1 ஆட்சி மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒத்துழையாமை இயக்கம் இப்போது அரசாங்கத் துறைகளின் பெரும் பாதிப்பை பாதிக்கிறது.
போராட்டத்தில் ஈடுபடும் மக்களை, மீண்டும் வேலைக்குச் செல்லுமாறு இராணுவ ஆட்சியாளர்கள் சனிக்கிழமை உத்தரவிட்டனர்.
ஆனால் வணிக தலைநகரான யாங்கோனில் இன்று ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கணக்கான ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டங்களில் இணைந்தனர். நகரத்தின் புறத்தில் உள்ள அவர்களின் வீட்டுத் தொகுதி வளாகத்திற்கு காவல்துறையினர் சென்று, அவர்களை மீண்டும் பணிக்கு வருமாறு உத்தரவிட்டனர். கோபமடைந்த மக்கள் கூடி கொந்தளிப்பான நிலைமை உருவானதை அடுத்து காவல்துறையினர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
வடக்கு கச்சின் மாநிலத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் இராணுவத்தினர் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டனர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இராணுவத்திற்கு மோதல் ஏற்பட்டது. இரவு வேளைகளில் பொதுமக்களை கைது செய்யும் நடவடிக்கைக்காக மின்சாரத்தை துண்டிக்கும் நோக்கத்துடன், மின் உற்பத்தி நிலையங்களை இராணுவம் பொறுப்பேற்க முயல்வதாக ஊழியர்கள் குற்றம்சுமத்தினர்.
சூகியை விடுவிக்கக் கோரி, பொறியியல் மாணவர்கள் மிகப் பெரிய நகரமான யாங்கோன் நகரத்தில் பேரணியாக சென்றனர்.
தென்கிழக்கு கடலோர நகரமான டேவியில், ஒரு குழுவினர் பேரணிாக சென்றபோது, ஒரு இசைக்குழு டிரம்ஸ் வாசித்தது. அந்த போராட்டத்தில் குறைந்தது ஆறு போலீசார் இணைந்ததாக மியான்மர் நவ் வலைத்தளம் தெரிவித்துள்ளது.
மத்திய நகரமான மைங்கியனில், ஆங் சான் சூகி விடுதலைக்கு அழைப்பு விடுத்த பலகைகளை ஏந்தி, அரசு நடத்தும் எம்.ஆர்.டி.வி மற்றும் எம்.டபிள்யூ.டி தொலைக்காட்சி நிலையங்களின் “பிரச்சாரத்தை” கண்டித்து, பெரும் கூட்டங்கள் தெருக்களில் திரண்டன.
கைது நடவடிக்கயை தடுக்க பல பகுதிகளில் மக்கள் கூட்டமாக வீதிகளில் ரோந்து செல்கிறார்கள். இராணுவத்தினர் அங்கு வரும் சமயங்களில் பானைகளில் தட்டி ஒலி எழுப்பி மக்களை எச்சரித்து வருகிறார்கள்.
நாடு முழுவதும் எதிர்ப்பாளர்கள் சூகியின் படங்களை வைத்திருந்தனர். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
வோக்கி டோக்கியை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாக அவர் மது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவரது தடுப்புக்காவல் நாளை திங்கள்கிழமையுடன் முடிகிறது.
ஆட்சி கவிழ்ப்பு நடந்ததிலிருந்து 384 க்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, அரசியல் கைதிகளுக்கான கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. கைதானவர்களின் பெரும்பாலோனோர் இரவு நேரங்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று சனிக்கிழமையன்று, இராணுவம் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வீடுகளிற்கு இரவு நேரங்களில் வரும் விருந்தாளிகள் பற்றி இராணுவத்திற்கு அறிவிக்க வேண்டும், சந்தேகநபர்களை தடுத்து வைக்கும் உரிமை இராணுவத்திற்கு உள்ளது, நீதிமன்ற உத்தரவை பெறாமலேயே எந்த பகுதியிலும்- தனியார் சொத்துக்கள் உள்ளிட்ட- சோதனை நடத்த இராணுவத்திற்கு அனுமதியுண்டு, அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்களை வழிநடத்துவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.