லேக் ஹவுஸ் என்று பொதுவாக அழைக்கப்படும் அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒஃப் சிலோன் லிமிடெட் (ANCL) நிறுவனம், முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு அவதூறுக்காக ரூ. 500 மில்லியன் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கொழும்பு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
நவம்பர் 2007 இல் சிலுமினவில் வெளியான ஒரு வெளியீட்டிற்காக இந்த வழக்கு தொடரப்பட்டது. அப்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியை (UPFA) பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக இரண்டு முழு பக்க அவதூறு அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அரசாங்கத்திலிருந்து எதிர்க்கட்சிக்கு மாறுவதற்கான அவரது முடிவைத் தொடர்ந்து இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டது.
2009 ஆம் ஆண்டில், ராஜபக்ஷ கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒஃப் சிலோன் லிமிடெட் மற்றும் அப்போதைய ஆசிரியர் கருணாதாச சூரியாராச்சிக்கு எதிராக ரூ. 500 மில்லியன் இழப்பீடு கோரி அவதூறு வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் 2010 இல் அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்து, முழுத் தொகையையும் வழங்கியது. சிவில் மேல்முறையீட்டு உயர் நீதிமன்றத்தில் அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒஃப் சிலோன் லிமிடெட் தொடர்ந்த மேல்முறையீடு 2013 இல் தள்ளுபடி செய்யப்பட்டது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒஃப் சிலோன் லிமிடெட் தாக்கல் செய்த இறுதி மேல்முறையீடு ஒக்டோபர் 14, 2024 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது, இது கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
நீதிபதிகள் ஜனக் டி சில்வா, அச்சலா வெங்கப்புலி மற்றும் சோபிதா ராஜகருணா ஆகியோர் முன்னிலையில் மேல்முறையீடு விசாரிக்கப்பட்டது.




