ஸ்பெயினில் 1.4 மில்லியன் ஆண்டுகள் பழைமையான மனித எலும்புகள் என்று நம்பப்படும் சிலவற்றைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
வடக்கு ஸ்பெயினின் பர்கோஸ் மாகாணத்தில் உள்ள அடாபுர்கா மலைகளில் பழமையான குகைகள் உள்ளன. இந்தக் குகைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளும்போது பண்டைய மனித எலும்புகள் தோண்டியெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேல் தாடை, கன்னத்தின் எலும்புகள், பழங்கால எச்சங்கள் ஆகியவை தங்கள் தேடுதல் வேட்டையில் கிடைத்ததாக ஆய்வாளர்கள் கூறினர். இந்த எலும்புகளில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சியின் மூலம் ஐரோப்பாவில் வாழ்ந்த ஆரம்பகால மனிதர்களின் முகத்தின் வடிவத்தைப் பார்க்க முடியும்.
மனித முகத்தின் பரிணாம வளர்ச்சிக்கான முக்கிய தடயங்களை இந்த ஆராய்ச்சியின் முடிவில் பெறமுடியும் என்று அடாபுர்கா அறக்கட்டளைக் குழு தெரிவித்துள்ளது.
எலும்புகளின் வயது, அது எந்த இனத்தைச் சேர்ந்தது போன்ற அடையாளங்களைத் தெரிந்துகொள்ள ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் கூறினர். அதற்கு குறைந்தது ஓராண்டு ஆகும் என்றும் ஆராச்சியாளர்கள் தெரிவித்தனர்.
ஐரோப்பாவிற்கு வந்த முதல் மக்களின் சுவாரஸ்யமான புதைபடிவத்தைக் கண்டெடுத்துள்ளதாக ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் கூறினார்.