தமக்கு தேவையான எரிபொருளை இலங்கை போக்குவரத்து சபை நிரவாகமே வழங்க வேண்டுமென தெரிவித்து, இ.போ.ச சேவைகளை முடக்கி தனியார் பேருந்து சேவையினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
எரிபொருளுக்காக இரு தரப்பும் மாலை 6 மணிவரை முரண்பாட்டில் ஈடுபட்டனர்.
இன்று காலை எரிபொருள் தருமாறு கோரி அரச பேருந்து சேவையினை முடக்கி தனியார் பேருந்து சேவையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் இரு தரப்பினருக்குமிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
குறித்த பேச்சுவார்த்தையானது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது வட மாகாணா வீதி பயணிகள் போக்குவரத்து அ.சபை தலைவர் சுப்பையா அமிர்தலிங்கம்,உதவி பொது முகாமையாளர் சிறிதரன் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் நடைமுறைப்படுத்தல் அதிகாரி, கிளிநொச்சி சாலை முகாமையாளர், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என கலந்து கொண்டனர்.
இதன்போது இரு தரப்பினரும் தமது பிரச்சினைகளை முன்வைத்தனர். அரச பேருந்து சாலைக்கு கிடைக்கும் ஒவ்வொரு எரிபொருள் தாங்கிய கொள்கலன் வருகை தரும்போது 1000 லீட்டர் டீசல் தருவதாக சாலை அதிகாரிகளினால் குறிப்பிடப்பட்டது.
அதற்கு தனியார் பேருந்து சேவையினர் மறுத்ததுடன், தமது சேவைக்கு அது போதாது எனவும், நாளாந்தம் 1500 லீட்டர் எரிபொருளாவது கிடைக்க வேண்டும் என தெரிவித்தனர். இந்த பேச்சுவார்த்தையானது தீர்வின்றி தொடர்ந்த நிலையில், அரச பேருந்து சாலை முகாமையாளர் உள்ளிட்டோர் இடைநடுவில் வெளியேறியிருந்தனர்.
இதையடுத்து, தனது பேருந்துகளை இ.போ.ச சாலை வாயிலின் குறுக்கே நிறுத்திய தனியார் துறையினர், டீசல் வழங்கினால்தான் பேருந்தினை அப்புறப்படுத்துவோம் என அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
எனினும், தமது பேருந்துகளை உள்ளே அனுமதித்தால்தான் அடுத்த கட்டம் தொடர்பில் பேச முடியும் என சாலை நிர்வாகத்தினர் கூறிய நிலையில் இரு தரப்பினருக்குமிடையில் பரஸ்பர கருத்து முரண்பாடு ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் அரச பேருந்தினை வீதிக்கு குறுக்காக மீண்டும் நிறுத்தப்பட்ட நிலையில் கனகபுரம் பிரதான வீதியின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் பொலிசார் நிலைமையை கட்டுப்படுத்த பரஸ்பர முயற்சி எடுத்த போதிலும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நீண்ட நேரம் எடுத்தது.
இந்த நிலையில், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட பேருந்தினை அப்புறப்படுத்தமாறு பொலிசார் கடும் தொனியில் சாலை நிர்வாகத்தினரிடம் தெரிவித்ததை அடுத்து பேருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
எனினும், தனியார் பேருந்துகள் இ.போ.ச கடமைக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்தன.
இதனால், இன்று மாலை வரை தனியார் பேருந்துகளிற்கு, இ.போ.சவினர் எரிபொருள் வழங்கவில்லை.
இன்று எரிபொருள் வழங்க முடியாது எனவு்ம, நாளை 10 மணிக்கு வருமாறும் பொலிசாரிடம் தெரிவித்ததை அடுத்து தனியார் பெருந்து சேவை உரிமையாளர்கள் பேருந்துகளை அப்படியே நிறுத்திவிட்டு செல்வதாகவும், அரச பேருந்துகளை உள்ளேயோ அல்லது வெளியேயோ செல்ல முடியாதவாறு தாம் பேருந்துகளை தரிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கிளிநொச்சி பொலிசார் பேச்சுவார்த்தை நடார்த்தி நாளை காலை 7 மணிக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க சாலை நிர்வாகம் சம்மதம் தெரிவித்ததாக தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து அனைத்து பேருந்துகளும் அப்புறப்படுத்தப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது.