கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி முன் அனுமதியின்றி மின்வெட்டு விதித்தமைக்காகவும், நீர் மின் நிலையங்களுக்கு பதிலாக டீசல் மின் உற்பத்தி நிலையங்களை இயக்கியதற்காகவும் இலங்கை மின்சார சபையின் இரண்டு பொறியியலாளர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜூன் மாதம் 9 ஆம் திகதி அரசாங்கம் இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததையடுத்து எதிர்ப்பின் அடையாளமாக இருவரும் தன்னிச்சையாக மின்வெட்டுகளை விதித்திருந்தனர்.
இச்சட்டமூலத்தை முன்வைப்பதற்கு எதிராக இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கங்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதால், கணினி கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு பொறியியலாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இரண்டு பொறியியலாளர்களின் செயற்பாடுகளினால் நாட்டுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜேசேகர குறிப்பிட்டார்.
இந்த நிலைமையின் அடிப்படையில் தொழிற்சங்கங்கள் மேலும் வேலைநிறுத்தங்களில் ஈடுபடலாம் என்றும் அமைச்சர் கூறினார்.
அரசாங்கம் என்ற ரீதியில் இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது எனவும், இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படாமல் இருக்க அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.