25.3 C
Jaffna
January 21, 2025
Pagetamil
இலங்கை

வடக்கு எரிபொருள் விநியோக பாதுகாப்பு விரைவில் ஆவா குழுவிடம் வழங்கப்படுமா?

வடக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்கமைக்க தற்காலிகமாக ஈடுபடுத்தப்படும் இளைஞர் குழுக்கள் குறித்து பரவலாக விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

‘உள்ளூர் சண்டியர்களை’ போல செயற்படும் குழுவினரே இந்த பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும், இவர்கள் அடாவடியின் மூலம் தமக்கும், தமது தரப்பினருக்கும் எரிபொருளை பெற்றுக் கொள்வதாகவும், முறையான வரிசையில் நிற்கும் சாதாரண பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் பரவலாக சுட்டிக்காட்டப்படுகிறது.

நேற்று முன்தினம் கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில், பெண் பிரதி அதிபர் ஒருவர் அவமானப்படுத்தப்பட்டிருந்தார். அவர் தனது மகனுடன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் போராட்டம் நடத்திய பின்னரே, எரிபொருளை பெற்றுக் கொண்டார்.

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் கடத்தல் கொடிகட்டி பறக்கும் நிலையில், இதனுடன் தொடர்புடைய தரப்பினர் கிளிநொச்சியில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில், முன்னணி பகுதியில் ஒழுங்கமைப்பவர்களை போல நடந்து கொள்வதை காண முடிவதாக  தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய எரிபொருள் நெருக்கடியையடுத்து, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெருமளவு பொதுமக்கள் முண்டியடிக்கிறார்கள். அங்கு பாதுகாப்பு கடமையில் குறிப்பிடத்தக்களவு இராணுவம், பொலிசாரே பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமலுள்ள நிலையில், ‘உள்ளூர் சண்டியர்’ குழுக்கள் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாதுகாப்பு, மக்கள் ஒழுங்கமைப்பில் ஈடுபடுகின்றன.

அந்த குழுக்களை சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பணிக்கமர்த்துகின்ற போதும், சில சந்தர்ப்பங்களில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதும் திடீரென தாமாக களமிறங்கி, சூழ்நிலையை ஒழங்கமைக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். இதன்போது பொலிசாரும் சம்பவ இடத்திலேயே நிற்கிறார்கள்.

கிளிநொச்சியில் பிரதி அதிபர் ஒருவர் அவமானப்படுத்தப்பட்டது, சுகாதார சேவைகள் பணிப்பாளர் தாக்கப்பட்டது என்பன வெளித்தெரிந்த சில சம்பவங்கள். எரிபொருளுக்கு செல்லும் அரச உத்தியோகத்தர்கள் எரிபொருளை நிரப்ப முன்னர் வரிசையில் காத்திருக்கும் பொதுமக்களாலும், முன்வரிசை ‘திடீர் ஒழுங்கமைப்பாளர்களாலும்’ வசைக்கு இலக்காவதாக பரவலாக குற்றம் சுமத்தப்படுகிறது.

தற்போதைய நெருக்கடி நிலையில், எரிபொருள் இல்லாமல் மக்கள் வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளதுடன், வருமானமும் இல்லாத சூழல் நிலவுகிறது. ஆனால், வருமான உத்தரவாதம் உள்ள அரச ஊழியர்களிற்கு எரிபொருளிலும் முன்னுரிமையெனில், அரச உத்தியோகமில்லாதவர்கள் கடலில் விழுந்து சாவதா? நெருக்கடி நிலைமையில் அரச உத்தியோகத்தர்கள் அல்லாதவர்களை அரச கைவிடுமெனில், அரச உத்தியோகத்தை மட்டுமே ஏன் நம்பியிருக்கிறீர்கள், தனியார் துறை, சுய முயற்சியில் ஈடுபட வேண்டுமென அரசும், அமைச்சர்களும் காலம் முழுவதும் ஏன் சொல்லி வருகிறார்கள் என்ற மறுபக்க நியாயத்தையும் பலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த தர்க்கம் ஒரு புறம் இருந்தாலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களை கட்டுப்படுத்தும் மாபியாக்களை அரசு கட்டுப்படுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அண்மையில் நெல்லியடி கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் விநியோகித்த போது, மக்கள் பல கிலோமீற்றர் நீளத்திற்கு பகல் முழுவதும் மக்கள் காத்திருந்தனர். எரிபொருள் நிரப்ப ஆரம்பித்ததும், எரிபொருள் நிரப்பும் நிலைய பகுதி குறிப்பிட்ட பிரதேசமொன்றின் இளைஞர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்கள்தான் வரிசையை ஒழுங்கமைத்தார்கள். அதுவரை இருந்த ஒழுங்கு குலைந்து, வீதிப்போக்குவரத்து தடைப்பட்டது. அந்த பகுதியை கட்டுப்படுத்தியவர்கள் பலர் சட்டவிரோத மணல் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

வரிசையின் பின்பகுதியில் காத்திருந்தவர்களிற்கு எரிபொருள் கிடைக்கவில்லை.

இது ஒரு உதாரணம். இப்படித்தான் வடக்கின் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களின் நிலைமை.

இந்த நிலைமை தொடர்ந்தால், அடுத்ததாக ஆவா குழுவின் பாதுகாப்பையும் சட்டபூர்வமாக பெறும் நிலைமை உருவாகுமா என்ற கேள்வியெழுந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கைதடி கிணற்றில் மீட்கப்பட்ட சிசு: கள்ளக்காதலால் விபரீதம்… சகோதரியுடன் சிக்கியது எப்படி?

Pagetamil

மதுபான தொழிற்சாலை சுற்றி வளைப்பில் ஒருவர் கைது

east tamil

யாழில் கரையொதுங்கிய மற்றொரு மிதவை

Pagetamil

எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க முடியாது – ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

east tamil

இலங்கையில் பிறந்த மியான்மார் குழந்தை

east tamil

Leave a Comment