மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (30) காலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை அரச போக்குவரத்துச் சேவைக்கான பேருந்தில் பயணித்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிகளுடன் சென்ற பேரூந்தின் சக்கரத்திற்கு காற்று போய் ஜெயபுரம் பகுதியில் இடை நடுவில் நின்றுள்ளது.
இதனால் பேருந்தில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதோடு,நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் பிரிதொரு பேரூந்தில் யாழ்ப்பாணம் நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்தனர்.
குறித்த பேருந்து நீண்ட தூர பயணத்திற்கு உகந்தது இல்லை எனவும், குறித்த பேருந்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக பயணம் செய்த பயணிகள் விசனம் தெரிவித்தனர்.
குறிப்பாக குறித்த பேருந்தில் உள்ள இருக்கைகளில் பயணிகள் அமர முடியாத நிலையில் சேதமடைந்த நிலையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் பயணிகள் விசனம் தெரிவித்துளள்னர்.
குறிப்பாக குறித்த பேருந்தில் யாழ் வைத்தியசாலைக்கு சென்றோர்,திணைக்களங்களுக்கு கடமைகளுக்கு சென்றவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர்.
இவ்வாறான பேருந்துகளை சேவைகளில் ஈடுபடுத்துவதன் காரணமாகவே விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்த பயணிகள் உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டு மக்கள் போக்கு வரத்திற்கு உகந்த பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.