அமைச்சர் பதவிக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கடும் மோதல் ஆரம்பமாகியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த குழுவினர் ஜனாதிபதி மற்றும் பிரதமரை அவ்வப்போது சந்தித்தும், பல்வேறு தரப்பினர் ஊடாகவும் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட 25 உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்த அமைச்சரவையே செயற்படுமென தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 23 அமைச்சர்களில் பதின்மூன்று பேர் ஏற்கனவே பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு சுமார் 10 அமைச்சரவை அமைச்சுக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 5 பேர் ஏற்கனவே பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
பொதுஜன பெரமுனவிற்கு மேலும் ஐந்து அமைச்சுப் பதவிகளே எஞ்சியுள்ள நிலையில், அவற்றை பெற சுமார் 40 உறுப்பினர்கள் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினேஸ் குணவர்தன மற்றும் ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடன், அரசின் ஏனைய பங்காளிக்கட்சிகளிற்கும் அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு மற்றுமொரு அமைச்சுப் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
மீதமுள்ள அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அடுத்த வாரம் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இராஜாங்க அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கை 30 ஆக மட்டுப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது