வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள எரிபொருள் மீள்நிரப்பு நிலையத்தினை இன்று (19) பொதுமக்கள் முற்றுகையிட்டமையினால் அவ்விடத்தில் பதட்டடமான சூழ்நிலை நிலவியதுடன் பாதுகாப்பு பிரிவினரும் வரழைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த எரிபொருள் நிலையத்தில் டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் என்பன நிறைவடைந்தாக மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் குறித்த எரிபொருள் மீள்நிரப்பு நிலையத்தில் எரிபொருள் சேமிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அத்தியாவசிய தேவைக்காக வைத்திருந்த பெற்றோலில் 20 லீற்றர் பெற்றோல் பீப்பாயில் நிறைக்கப்பட்டு தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்டது. இதனை அவதானித்த பொதுமக்கள் தமக்கும் எரிபொருள் வழங்குமாறு தெரிவித்தனர். எனினும் அத்தியாவசிய தேவைக்காக சேமிப்பிலுள்ள எரிபொருளை வழங்க முடியாது என எரிபொருள் நிலைய ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதன் போது எரிபொருள் நிலைய ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
நிலமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் அவ்விடத்திற்கு வந்து, பொதுமக்களிடம் கலந்துரையாடி தனியாருக்கு வழங்கிய 20 லீற்றர் பெற்றோலை கையகப்படுத்தியதுடன் அதனை எரிபொருள் சேமிப்பு தாங்கியினுள் மீள செலுத்தினர்.
அதன் பின்னர் நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன் மக்களை அவ்விடத்திற்கு பொலிஸார் அகற்றினர். மேலும் அத்தியாவசிய தேவைக்காக சேமிப்பில் இருக்கும் எரிபொருளை தனியாருக்கு வழங்க வேண்டாம் என எரிபொருள் நிலையத்தினருக்கு எச்சரிக்கையும் வழங்கப்பட்டது.
குறித்த எரிபொருள் நிலையத்தில் 15 இராணுவத்தினர், 10 பொலிஸார் 2 விசேட அதிரடிப்படையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.