விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை, வழக்கு விசாரணைக்காக அமெரிக்கா அனுப்பும் முடிவை இங்கிலாந்து அரசு எடுக்கலாம் என வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
அமெரிக்க இராணுவம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோக்களை விக்கிலீக்ஸ் இணையதளத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியிட்டார் அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே. இதனால் விக்கிலீக்ஸ் மீது குற்ற விசாரணையை அமெரிக்கா தொடங்கியது.
இதனிடையே, இங்கிலாந்தில் இருந்த ஜூலியன் அசாஞ்சே மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி அவருக்கு பிடிவிறாந்து பிறப்பித்தது ஸ்வீடன். இது அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் முயற்சி என ஜூலியன் அசாஞ்சே குற்றம் சாட்டினர். இந்த வழக்கில் தோல்வியை சந்தித்த ஜூலியன் அசாஞ்சே ஜாமீன் விதிமுறைகளை மீறி, லண்டனில் உள்ள ஈக்குவடார் தூதரகத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு தஞ்சம் அடைந்தார். 2019ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்ட அடைக்கலத்தை ஈக்குவடார் அரசு வாபஸ் பெற்றது. அதன்பின் இவரை இங்கிலாந்து போலீசார் கைது செய்து லண்டன் சிறையில் அடைத்தனர்.
உளவு பார்த்ததாக ஜூலியன் அசாஞ்சே மீது 17 குற்றச்சாட்டுகள் உள்ளதால் அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும்படி இங்கிலாந்து அதிகாரிகளிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்தது. அமெரிக்க சிறையின் கடுமையான சூழலை சந்திப்பது, தன்னை தற்கொலைக்கு தூண்டும் என ஜூலியன் அசாஞ்சே தரப்பில் கூறப்பட்டதால், முதலில் அமெரிக்காவின் கோரிக்கையை லண்டனில் உள்ள மாவட்ட நீதிமன்றம் நிராகரித்தது.
ஜூலியன் அசாஞ்சே மனிதநேயத்துடன் நடத்தப்படுவார் என அமெரிக்கா உறுதியளித்ததால், அவரை அமெரிக்காவுக்கு அனுப்ப லண்டன் உயர் நீதிமன்றம் அனுமதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து அப்பீ்ல் செய்ய, ஜூலியன் அசாஞ்சேவுக்கு இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் அனுமதி மறுத்தது.
இந்நி்லையில், ஜூலியன் அசாஞ்சேவை, அமெரிக்கா அனுப்பும் முடிவை இங்கிலாந்து அரசு எடுக்கலாம் என வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி நேற்று உத்தரவு பிறப்பித்தார். இதனால் அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தலாமா, வேண்டாமா என்ற முடிவை இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ப்ரீத்தி படேல் எடுக்கவுள்ளார்.
இந்த நடவடிக்கை மூலம் ஜூலியன் அசாஞ்சே உள்துறை அமைச்சரிடமும், உயர் நீதிமன்றத்திலும் அப்பீல் செய்ய முடியும். இதற்கான நடவடிக்கையில் அவரது சட்டத்தரணிகள் இறங்கியுள்ளனர்.