ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நெருங்கிய சகாவிக்டர் மெட்வெட்சக்கின் மனைவி, தமது கணவர் உக்ரேனியர்களால் அடித்துத் துன்புறுத்தப்படுவதாகக் கூறியிருக்கிறார்.
உக்ரேனிய இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அவர் விசாரணையின்போது தாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மொஸ்கோவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் விக்டர் மெட்வெட்சக்கின் மனைவி ஒக்சான மர்சென்கோ இதனை தெரிவித்தார்.
விக்டரின் இரு படங்களை உக்ரேனியர்கள் வெளியிட்டுள்ளனர். ஒன்றில் அவர் சாதாரணமாகக் காணப்படுவதாகவும், மற்றொன்றில் தலைமுடி கலைந்து தளர்ந்து காணப்படுவதாகவும் அவரது மனைவி கூறினார்.
உக்ரேனியப் பாதுகாவல் சேவையோ, ரஷ்யாவோ அது குறித்துக் கருத்துத் தெரிவிக்கவில்லை.
ரஷ்யப் பாதுகாப்பு மன்றத்தின் இணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ், உக்ரேனிய அதிகாரிகள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் சிலர், விக்டரை அடித்து வாக்குமூலம் பெற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து அவரைச் சிறையிலடைத்து, அவருக்குப் பதிலாக உக்ரேனியக் கைதிகளை விடுவிக்கக் கோரும் திட்டமுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.