சாவகச்சேரி நகரசபை மற்றும் பிரதேசசபையில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர்களிடம் பதவி விலகம் கடிதம் பெறப்பட்டுள்ளது. சில உறுப்பினர்கள் பதவிவிலகல் கடிதத்தை வழங்கியுள்ளனர். எனினும், குறிப்பிட்ட தொகையாக உறுப்பினர்கள் பதவிவிலகல் கடிதங்களை சமர்ப்பிக்க மறுத்து விட்டனர்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் அண்மையில் நடந்த போது, தற்போது பதவியிலுள்ள உள்ளூராட்சி உறுப்பினர்களிற்கு பதிலாக புதியவர்களை நியமிப்பது கட்சிக்கு நன்மையாக இருக்குமென பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது.
உள்ளூராட்சி உறுப்பினர்கள் 4 வருடங்கள் பதவிவகித்து விட்டதால், அவர்களில் யாரேனும் பதவிவிலகி புதியவர்களிற்கு வாய்ப்பளிப்பதை வரவேற்பதென அங்கு பேசப்பட்டது. எனினும், உத்தியோகபூர்வகமாக எந்த முடிவும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
இந்த நிலையில், சில நாட்களின் முன்னர் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சாவகச்சேரி தொகுதிக்கிளைக் கூட்டம் கூட்டப்பட்டது. தொகுதிக்கிளை தலைவர் கே.சயந்தன் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்ட சாவகச்சேரி நகரசபை, பிரதேசசபையின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவிவிலகல் கடிதத்தை எழுதி வழங்க வேண்டுமென நிர்ப்பந்தித்துள்ளார். அத்துடன், உறுப்பினர்களின் பதவிவிலகல் பற்றி கட்சி முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
எனினும், இதனை சில உறுப்பினர்கள் ஏற்கவில்லை. கட்சி அப்படியொரு முடிவை தமக்கு அறிவிக்கவில்லையென அவர்கள் குறிப்பிட்டனர்.
தற்போதைய நிலையில், சயந்தனின் அழுத்தத்திற்கு அடிபணிந்து சில உறுப்பினர்கள் பதவி விலகல் கடிதங்களை வழங்கியுள்ள சில உறுப்பினர்கள் விரைவில் பதவியை இழக்கலாமென தெரிகிறது.
எனினும்,பதவிவிலகல் கடிதங்களை வழங்காதவர்களிற்கு அப்படியான சிக்கல்கள் ஏற்படாது.